சீனாவில் 25வது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிர் தப்பிய சிறுமி

சீனாவில் 9 வயதுச் சிறுமி ஒருவர் 25வது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிர் தப்பியுள்ளார்.
இந்த சம்பவம் ஹேபேய் (Hebei) பகுதியில் நடந்தது. சிறுமி அவரது அறையில் தனியாக இருந்த போது புழுக்கமாக இருந்ததால் அவர் ஜன்னலைத் திறக்க முயன்றார்.
ஆனால், ஜன்னல் சற்று தளர்வாக இருந்ததால் அவர் தவறி 7ஆவது மாடியில் உள்ள தளமேடையில் விழுந்தார் என அவருடைய தாயார் கூறினார்.
வீட்டுப்பாடம் செய்துகொண்டிருந்த சிறுமியை அவளது தந்தை சாப்பிட அழைப்பதற்காக அறைக்குச் சென்றார். மகளைக் காணவில்லை என்று பதறிய அவர் உடனே அலுவலகத்தில் இருந்த மனைவிக்குத் தகவல் தெரிவித்தார்.
பின்பு சிறுமி 7ஆவது மாடியில் விழுந்து கிடப்பது அவர்களுக்குத் தெரிய வந்தது. சிறுமி சுயநினைவுடன் இருந்துள்ளார்.
சுற்று வட்டாரத்தில் இருந்த மருத்துவமனைகள் சிறுமிக்குச் சிகிச்சை அளிக்க மறுத்ததால் அவர் பெய்ச்சிங்கில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
சிறுமியின் கைகள், முதுகெலும்புகளில் முறிவுகள் இருப்பது கண்டறியப்பட்டது. மூளைக்கு எந்தப் பாதிப்பும் இல்லை எனத் தாயார் குறிப்பிட்டார்.
சிறுமிக்குப் பல்வேறு அறுவைச் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளார். தற்போது அவர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிவிட்டார்.