காசா அமைதி திட்டம் – ஹமாஸ் நிராயுதபாணியாக்கப்பட வேண்டும் : எச்சரிக்கும் ட்ரம்ப்!
காசாவில் அமைதி திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்துள்ள நிலையில், விரைவில் ஒரு உடன்பாட்டை எட்ட முடியும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
புளோரிடாவில் நேற்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய அவர் மேற்படி அறிவித்துள்ளார்.
இதன்போது அமெரிக்கா தலைமையில் முன்வைக்கப்பட்ட 20 அம்ச அமைதி திட்டம் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
நெதன்யாகுவுடன் நடந்த சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், காசாவில் அதன் இராணுவம் தொடர்ந்து தாக்குதல்களை நடத்திய போதிலும், இஸ்ரேல் “திட்டத்தை 100% நிறைவேற்றியுள்ளது” என்று கூறியுள்ளார்.
ஈரான் தனது பாலிஸ்டிக் ஏவுகணை அல்லது அணு ஆயுதத் திட்டங்களை மீண்டும் கட்டியெழுப்பத் தொடங்கினால், அதன் மீது மற்றொரு பெரிய தாக்குதலை தனது நாடு முன்னெடுக்கும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் ஹமாஸ் நிராயுதபாணியாக்கப்பட வேண்டும் எனவும், அவ்வாறு இல்லையென்றால் நரகத்தை பார்க்க வேண்டியிருக்கும் எனவும் அவர் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





