எரிவாயு தட்டுப்பாடு – மாற்று ஏற்பாடுகளை கோரி மோடிக்கு ஸ்டாலின் கடிதம்
வணிக எரிவாயு தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ள உணவகங்களுக்குத் தேவையான அனைத்து மாற்று ஏற்பாடுகளும் செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி
இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
தேவைப்படும் கூடுதல் மின்சாரத்தை வழங்க வேண்டுமென்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,
‘அமெரிக்கா – ஈரான் போரினால் தமிழ்நாட்டுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், இது குறித்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இன்று விரிவாக ஆய்வு செய்தேன்.
தற்போது பாதிக்கப்பட்டுள்ள பல்வேறு வளைகுடா நாடுகளில் வாழும் தமிழர்களின் பாதுகாப்பையும் அப்பகுதியில் சிக்கியுள்ள தமிழ்நாட்டு மீனவர்களின் நலனையும் உறுதி செய்திடத் தேவையான
நடவடிக்கைகளை ஒன்றிய அரசு எடுத்திட வேண்டும் என்று பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளேன்.
இந்தப் போரால் ஏற்பட்டுள்ள எரிவாயு தட்டுப்பாட்டினால் பொதுமக்களும் வணிக நிறுவனங்களும், தமிழ்நாட்டின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழிற்சாலைகளும் எந்த விதத்திலும்
பாதிக்கப்படாமல் இருப்பதை ஒன்றிய அரசு உறுதி செய்ய வேண்டும்.
குறிப்பாக, வணிக எரிவாயு தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ள உணவகங்களுக்குத் தேவையான அனைத்து மாற்று ஏற்பாடுகளும் செய்யப்பட வேண்டும் என்றும்,
தேவைப்படும் கூடுதல் மின்சாரத்தைப் பெற்று வழங்கிட வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளேன்’ எனத் தெரிவித்துள்ளார்.





