அமெரிக்க தூதுவர் விடைபெறுவதை பாற்சோறு சமைத்து கொண்டாடிய கம்மன்பில!
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங் Julie Chang நாடு திரும்புவது தொடர்பில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலUdaya Gammanpila .
நான்கு வருடகால சாபம் முடிவடைகின்றது எனவும், இது பாற்சோறு சமைத்து கொண்டாட வேண்டிய தருணம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பில் இன்று (16) விசேட ஊடக சந்திப்பை நடத்தியே கம்மன்பில இவ்வாறு கூறினார்.
அத்துடன், ஊடக சந்திப்பில் பாற்சோறு சாப்பிட்டு மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினார்.
ஜுலி சங் 2022 பெப்ரவரி மாதம் முதல் இலங்கைக்கான அமெரிக்காவின் தூதுவராக செயல்பட்டார். சுமார் 4 வருடகால இராஜதந்திர சேவையின் பின்னர் இன்று அவர் நாடு திரும்புகின்றார்.
கோட்டாபய ராஜபக்ச ஆட்சியில் உதய கம்மன்பில அமைச்சராக செயல்பட்டார். அப்போதும் அவர் அமெரிக்க தூதுவரை கடுமையாக விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
புலிகளால் அடைய முடியாத இலக்கை அரசியல் ரீதியில் பெற்றுக்கொடுக்க அமெரிக்க தூதவர் முற்படுகின்றார் என கடும் போக்குடைய சிங்கள தேசியவாத அமைப்புகள் குற்றஞ்சாட்டி வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.





