டிரம்புடனான பதட்டங்களுக்கு மத்தியில் கனடாவில் சந்திக்கும் G7 வெளியுறவு அமைச்சர்கள்

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்புக்கும் நட்பு நாடுகளுக்கும் இடையே அதிகரித்துவரும் பதற்றத்துக்கு இடையே முன்னணி மேற்கத்திய நாடுகளின் ஜி7 வெளியுறவு அமைச்சர்கள் கனடாவில் (மார்ச் 13) சந்தித்தனர்.
உக்ரேன் தொடர்பான வெளிநாட்டுக் கொள்கையும் வெளிநாட்டு இறக்குமதிகள் மீதான வரி விதிப்பும் அமெரிக்காவுக்கும் மற்ற நாடுகளுக்கும் இடையிலான உறவைப் பாதித்துள்ளது.
கியூபெக் மலைகளில் நடைபெறும் இரண்டு நாள் ஜி7 கூட்டத்துக்குப் பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், அமெரிக்கா ஆகியவற்றுடன் ஐரோப்பிய ஒன்றியமும் ஒன்றுகூடியுள்ளது.
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ உக்ரேனுடன் நேற்று முன்தினம் (மார்ச் 11) நடத்திய கலந்துரையாடல் குறித்து இதர தரப்புகளுடன் பகிர்ந்துகொள்வார்.
சவுதி அரேபியாவின் ஜெடாவில் நடைபெற்ற அந்தக் கலந்துரையாடலில் ஒரு மாத போர் நிறுத்த உடன்பாட்டுக்கு உக்ரேன் தயாராய் இருப்பதாகச் சொன்னது.
ரஷ்யாவையும் உக்ரேனையும் கலந்துரையாட வைக்க எடுக்கப்படும் முயற்சியைக் கலைக்கும் வகையில் எந்த நாடும் பேசவேண்டாம் என்று ரூபியோ கடந்த திங்கட்கிழமை (மார்ச் 10) கேட்டுக்கொண்டார்.
டிரம்ப்பின் வரி விதிப்பும் பரவலாகப் பேசப்பட்டது. அமெரிக்காவின் பாதுகாப்புக்கான உத்தரவாதம் மீது அதிகம் சார்ந்திருக்கும் ஜப்பானும் வரி விதிப்பிலிருந்து தப்பிக்கவில்லை.
ரஷ்யா மீண்டும் இணைக்கப்படும்போது ஜி8 குழு உயிர்ப்பிக்கப்படும் என்று டிரம்ப் சொன்னார்.கிரைமியாவை ஆக்கிரமித்ததால் 11 ஆண்டுகளுக்கு முன் ரஷ்யா ஜி7 குழுவிலிருந்து நீக்கப்பட்டது.
அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையிலான உறவு வலுவிழந்துள்ளதைக் குறிப்பிட்ட ரூபியோ, ஜி7 கூட்டம் கனடா பற்றியது அல்ல என்று குறிப்பிட்டார்.