‘ஜி PAY Scan பண்ணுங்க.. Scam பாருங்க’: திமுக-வின் நவீன பிரச்சாரத்தால் கலக்கத்தில் BJP!
திமுக ஊழல் கட்சி என்ற பாஜகவின் தொடர் குற்றச்சாட்டுகளுக்கு பாஜகவின் ஊழல்கள் குறித்து இளைஞர்களை கவரும் நவீன உத்தி மூலம் திமுக பதிலடி கொடுத்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தீவிரப் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர்.மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தேசியத் தலைவர் ஜே பி நட்டா, மத்திய அமைச்சர்கள் ஸ்மிருதி இரானி, நிர்மலா சீதாராமன் என பெரிய படையே தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்குசேகரித்து வருகிறது.
இவர்கள் அனைவருமே திமுக ஒரு ஊழல் கட்சி என்பதையே பிரதானமாக முன்வைத்து மக்களிடம் பிரச்சாரம் செய்து வருகின்றனர். குறிப்பாக 2 ஜி விவகாரத்தை தற்போதும் கையில் எடுத்து திமுகவை விமர்சித்து வருகின்றனர்.
அண்மையில் வேலூரில் பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசிய பிரதமர் மோடி, “ஒட்டுமொத்த குடும்பமும் தமிழகத்தைச் சூறையாடுகிறது. திமுகவின் குடும்ப அரசியலால் தமிழக இளைஞர்கள் முன்னேறவில்லை. கொள்ளை அடிப்பதிலும், ஊழலிலும் திமுக காப்பிரைட் வைத்துள்ளது. தமிழகத்தை கொள்ளையடிப்பதை தவிர திமுக குடும்பம் எந்த வேலையும் செய்வதில்லை.
இன்று நமது நாடு 5 ஜியில் உலக சாதனை படைத்து வருகிறது, ஆனால் திமுக 2 ஜி ஊழலால் அவப்பெயரை ஏற்படுத்தியது” என்று பேசி இருந்தார் இப்படி தொடர்ந்து தங்களை விமர்சிக்கும் பாஜகவுக்கு திமுக தற்போது பதில் கொடுத்துள்ளது. பாஜக அரசை விமர்சிக்கும் வகையில் ஹைடெக் பிரச்சார வியூகத்தை முன்னெடுத்துள்ளது. இது இளைஞர்கள் மத்தியில் வெகுவாக கவனத்தை ஈர்த்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பிரதமர் மோடி புகைப்படத்துடன் “ஜி PAY.. Scan பண்ணுங்க.. Scam பாருங்க” என்ற வாசகங்களுடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அந்த போஸ்டர்களில் மோடி உருவத்துடன் இருக்கும் QR கோடை ஸ்கேன் செய்தால், பாஜக மீது திமுக குற்றம் சாட்டிவரும் தேர்தல் பத்திர ஊழல், சுங்கச்சாவடி முறைகேடு, பாரத்மாலா, துவாராகா விரைவு பாலம் கட்டுமானம் என பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை குறித்த விவரங்களை வெளிப்படுத்தும் வீடியோ ஓடத் தொடங்குகிறது.
இந்த போஸ்டர் தேசிய அளவில் பேசு பொருளாக மாறியுள்ளது. இது பாஜகவை எதிர்க்கும் கட்சிகள் மத்தியில் மிகச்சிறந்த உத்தியாக கருதப்படுகிறது. எனவே இது போன்ற போஸ்டர்களை இந்தியா முழுவதும் ஒட்டுவதற்கு அக்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. பாஜகவுக்கு திமுக கொடுத்துள்ள இந்த பதிலடி பாஜகவினரை கலக்கமடைய வைத்துள்ளது இதற்கு தகுந்த பதிலடி கொடுக்க அவர்களும் திட்டமிட்டுள்ளனர்.