இலங்கை ஜனாதிபதிக்கு பூரண ஆதரவு – தமிழ்த்தேசிய அரசியல் பிரதிநிதிகள் அறிவிப்பு
இலங்கையின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அநுரகுமார திஸாநாயக்கவின் வெற்றி முன்னேற்றகரமான மாற்றமாகும் என தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
புதிய ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருக்கும் அநுரகுமார திஸாநாயக்க புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பணிகளைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்கு இணங்கியுள்ளார்.
இந்த நிலையில், அதனை முன்னிறுத்தி அவர் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்குப் பூரண ஆதரவை வழங்குவோம் என தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு குறித்து அவருடன் இனிவருங்காலங்களில் பேசுவோம் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுரகுமார திஸாநாயக்க நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டிருக்கும் நிலையில், அவருக்கு வாழ்த்துத் தெரிவித்திருக்கும் வட, கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், அவரது வெற்றி குறித்து பின்வருமாறு கருத்து வெளியிட்டுள்ளனர்:
“அநுரகுமார திஸாநாயக்கவின் வெற்றி சிறந்த முன்னேற்றகரமான நகர்வாகும். நாம் எந்த வேட்பாளரை ஆதரிப்பதென ஆராய்ந்தபோது சஜித் பிரேமதாஸவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இல்லாத பல விடயங்கள் அநுரகுமார திஸாநாயக்கவின் விஞ்ஞாபனத்தில் இருந்தன என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
அதேபோன்று அவர் அரசியலமைப்பில் உள்ளவாறு மாகாணசபை முறைமையை நடைமுறைப்படுத்துவதாகவும், காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் குறித்துக் கலந்துரையாடலாம் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
அதுமாத்திரமன்றி 2015 – 2019 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு உருவாக்க செயன்முறையைத் தொடர்ந்து முன்னெடுத்து முடிவுறுத்துவதாகவும், நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதாகவும் அவர் உத்தரவாதம் அளித்திருந்தார்.
எனவே அவர் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றதன் பின்னர் முன்னெடுக்கக்கூடிய இவ்வனைத்து நடவடிக்கைகளுக்கும் நாம் முழுமையாக ஒத்துழைப்பு வழங்குவோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
“ஜனாதிபதித்தேர்தலில் அநுரகுமார திஸாநாயக்கவின் வெற்றி மிகச்சிறந்த மாறுதலாகும் என புளொட் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் குறிப்பிட்டார்.
இவ்வேளையில் புதிய ஜனாதிபதியாகத் தெரிவாகியிருக்கும் அநுரகுமார திஸாநாயக்கவுக்கு எனது வாழ்த்தினைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவர் நாட்டை ஊழல் மோசடிகளற்ற தூய நாடாக மாற்றியமைப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
இருப்பினும் தமிழ்த்தேசிய பிரச்சினையைப் பொறுத்தமட்டில், இனிவருங்காலங்களிலேயே இதுபற்றி அவருடன் பேசுவோம். தமிழர்களுக்கான அரசியல் தீர்வு விடயத்தில் அவர் விசேட கவனம் செலுத்தவேண்டும் என்பதே எனது கோரிக்கையாக இருக்கின்றது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.