இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிப்பு: நடக்கப்போவது என்ன?
மத்திய கிழக்கு போர் சூழவுக்கு மத்தியில் இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய ஒரு லீற்றர் ஒக்டேன் 92 பெட்ரோலின் விலை 24 ரூபா அதிகரித்து, 317 ரூபாவாக விற்கப்படுகின்றது.
ஒக்டேன் 95 பெட்ரோல் விலை 25 ரூபா அதிகரிக்கப்பட்டு, 365 ரூபாவாக விற்கப்படுகிறது.
ஓட்டோ டீசலின் விலை 22 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, 303 ரூபாவாகவும், சூப்பர் டீசல் விலை 24 ரூபா அதிகரிக்கப்பட்டு, 353 ரூபாவாகவும் விற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, மண்ணெண்ணெய் லீற்றருக்கு 13 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஈரான் மீதான போரை அடுத்து அனைத்துலக சந்தையில் எண்ணெய் விலை சடுதியாக அதிகரித்துள்ளதை அடுத்து இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் விலைகளை அதிகரித்துள்ளது.
எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதால் பஸ் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் இன்று தீர்மானம் எடுக்கப்படும் என தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
அதேபோல பாடசாலை போக்குவரத்து சேவைகளை முன்னெடுக்கும் வேன் சாரதிகள், போக்குவரத்து கட்டணத்தை 5 சதவீதத்தால் அதிகரித்துள்ளனர்.
அதேவேளை, எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இது விடயத்தில் மத்திய கிழக்கு போர்மீது பழிசுமத்திவிட்டு, தனது பொறுப்பில் இருந்து அரசாங்கம் நழுவ முடியாது எனவும் எதிரணி சுட்டிக்காட்டியுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட கட்சிகளே எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.
எரிபொருள் விலை அதிகரிப்பானது ஏனைய பொருள் விலைகளிலும் அதிகரிப்பை ஏற்படுத்தும் என சுட்டிக்காட்டப்படுகின்றது.




