கடந்த 24 ஆண்டுகளில் முதல்முறையாக ஜெர்மனி செல்லும் பிரான்ஸ் அதிபர்
பிரான்ஸ் அதிபர் இமானுவெல் மெக்ரோன், மூன்று நாள் அதிகாரபூர்வப் பயணம் மேற்கொண்டு ஜெர்மனி சென்றுள்ளார்.
24 ஆண்டுகளில் பிரான்ஸ் அதிபர் ஒருவர் ஜெர்மனிக்கு அதிகாரபூர்வப் பயணம் மேற்கொண்டிருப்பது இதுவே முதல்முறையாகும் .
உக்ரேனியப் போர் முதல் அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தல் வரை ஐரோப்பா முக்கியச் சவால்களை எதிர்கொள்ளும் வேளையில், அதிபர் மெக்ரோனின் பயணம், பிரெஞ்சு-ஜெர்மானிய உறவின் வலிமைக்கான உரைகல்லாகக் கருதப்படுகிறது.
அதிபர் மெக்ரோன், பிரதமர் ஷோல்ஸ் இருவரும் வெவ்வேறு விதமான தலைமைத்துவ நடைமுறையைக் கடைப்பிடிப்பவர்கள்.தற்காப்பு முதற்கொண்டு அணுசக்தி வரையிலான சில அம்சங்கள் தொடர்பில் இருவரும் வெளிப்படையாக மோதிக்கொண்டதுண்டு.இருப்பினும் அண்மையில் இருவரும் நிதிச் சீர்திருத்தம், எரிசக்திச் சந்தை மானியம் போன்ற பல்வேறு அம்சங்களின் தொடர்பில் சமரசம் செய்துகொண்டுள்ளனர்.
இதனால் ஐரோப்பிய ஒன்றியம் சில ஒப்பந்தங்களைச் செய்துகொள்வதும் முன்னிலும் ஒன்றுபட்ட அணியாக விளங்குவதும் சாத்தியமானது.இரு நாட்டு உறவில் பதற்றங்கள் நிலவினாலும், ஐரோப்பிய ஒன்றியத்தைக் கிழக்குப் பகுதியில் விரிவுபடுத்த வேண்டியதன் அவசியம் தொடர்பில் இரு நாடுகளும் இணக்கம் கண்டதைக் கவனிப்பாளர்கள் சுட்டினர்.
அதிபர் மெக்ரோனின் பயணம், இருதரப்பு உறவு நல்லமுறையில் இருப்பதைக் காட்டுவதற்காக அரசியல் ரீதியாக ஆக உயர்ந்த நிலையில் மேற்கொள்ளப்படும் முயற்சி என்று அவர்கள் கூறினர்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒருவேளை டொனல்ட் டிரம்ப் வெற்றிபெற்றால், ஐரோப்பாவின் தற்காப்பு பாதிக்கப்படக்கூடும் என்று தற்காப்பு வல்லுநர்கள் கூறுகின்றனர்.
அதிபர் மெக்ரோனுடன் அவரது மனைவி பிரிகிட்டும் ஜெர்மனி செல்கிறார். மே 26ஆம் திகதி அவர்கள் ஜெர்மானிய அதிபர் ஃபிராங் வால்டர் ஸ்டெயின்மெயரைச் சந்திப்பர். பின்னர் பெர்லின் நகர மேயர் கய் வெக்னெருடன் புகழ்பெற்ற பிராண்டென்பர்க் கேட் பகுதியில் உலா செல்வர் என்று கூறப்பட்டது.