இஸ்ரேல் தலைநகருக்கு திடீர் பயணம் மேற்கொண்ட பிரான்ஸ் ஜனாதிபதி
இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவிற்கு பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் வருகை தந்துள்ளார்.
காசாவில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே போர் தீவிரமடைந்து வருகின்றது.
இந்த நிலையில், பல்வேறு நாட்டு தலைவர்கள் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
சமீபத்தில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் ஆகியோர் தனி தனியே இஸ்ரேலுக்கு சென்று அலோசனை நடத்தியதோடு, தங்களது முழு ஆதரவையும் இஸ்ரேலுக்கு வழங்குவதாக உறுதி அளித்தனர்.
அந்த வகையில், தற்பொழுது இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவிற்கு பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரோன் வந்துள்ளார்.
அங்கு அவர் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக் மற்றும் காஸாவில் பிணைக் கைதிகளின் குடும்பத்தினரை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இஸ்ரேல் ஏர்போர்ட்டில் இறங்கியதும் செய்தியாளர்களிடம் பேசிய இம்மானுவேல் மக்ரோன், போர் நிறுத்தம் முதல் சுதந்திர பாலஸ்தீனிய அரசை உருவாக்குவது வரை இஸ்ரேலிய அரசாங்கத்துடன் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதாக தெரிவித்தார்.
இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு கடந்த அக்டோபர் 7ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பின்னர், ஹமாஸ் அமைப்பினர் அதிகம் வசிக்கும் காசாவில் இஸ்ரேல் ராணுவம் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. தொடர்ந்து 18-வது நாளாக இந்த தாக்குதல் நடைபெற்று வருகிறது.
வான்வெளி, தரைவழி தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் அங்குள்ள பாலஸ்தீன மக்கள் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இதற்கிடையில், ஹமாஸ் அமைப்பினர் வசம் இஸ்ரேல் மற்றும் ஒரு சில வெளிநாட்டவர் என பலர் பிணைய கைதிகளாக உள்ளனர். இவர்களை பத்திரமாக மீட்கும் முயற்சியிலும் இஸ்ரேல் ராணுவம் ஈடுபட்டுள்ளது.