2024-ம் ஆண்டு இந்தியாவின் குடியரசு தின விழாவுக்கு சிறப்பு விருந்தினராக பங்கேற்க பிரான்ஸ் அதிபருக்கு அழைப்பு
எதிர்வரும் 2024 குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தின் போது உலகத் தலைவர்களை சிறப்பு விருந்தினர்களாக இந்தியா அழைப்பது வழக்கம். கொரோனா தொற்று காரணமாக 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் சிறப்பு விருந்தினர்கள் அழைக்கப்படவில்லை.
நடப்பு ஆண்டு (2023) குடியரசு தினத்தின் சிறப்பு விருந்தினராக எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா அல்-சிசி பங்கேற்றார். இதற்கு முன், 2020ல் பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ, 2019ல் தென் ஆப்ரிக்க அதிபர் சிரில் ரமபோசா, 2018ல் தென்கிழக்கு ஆசிய தலைவர்கள், 2015ல் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, 2014ல் ஜப்பான் பிரதமர் ஷின்சோ, 2013ல் பூட்டான் மன்னர் ஜிக்மே ஆகியோர் பங்கேற்றனர். .
இவர்கள் மட்டுமின்றி நெல்சன் மண்டேலா, ஜான் மேஜர், முகமது கடாமி, ஜாக் சிராக் போன்ற உலகத் தலைவர்களும் இதற்கு முன் குடியரசு தினத்தில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், 2024 குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.