அமெரிக்காவில் தடம் புரண்ட சரக்கு ரயில்; அவசரநிலை பிரகடனம் !
அமெரிக்காவின் கெண்டகி மாகாணத்தில் சரக்கு ரயில் ஒன்று தடம் புரண்ட விபத்தில் ஆபத்தான ரசாயனங்கள் எரிந்து வருவதால் அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் கெண்டகி மாகாணத்தில் சிஎஸ்எக்ஸ் என்ற ரயில் நிறுவனத்திற்கு சொந்தமான ரயில் ஒன்று ரசாயனங்களை ஏற்றுக்கொண்டு லிவிங்ஸ்டன் நகரை நோக்கி சென்று கொண்டிருந்தது. லிவிங்ஸ்டன் நகருக்கு முன்னாக எதிர்பாராத விதமாக ரயில் தடம் புரண்டது.இதில் ரயிலில் இணைக்கப்பட்டிருந்த 16 பெட்டிகளும் தடம் புரண்டு விபத்திற்கு உள்ளானது. இந்த விபத்தின் போது ரயிலில் இரண்டு பெட்டிகளில் இருந்த சல்ஃபர் என்ற நச்சுப் பொருள் காற்றுடன் வினையாற்றி தீப்பிடித்து எரிந்தது.
இதனால் அந்த பகுதி முழுவதும் சல்ஃபர் டை ஆக்சைடு என்ற நச்சுப்புகை பரவத் துவங்கியது. இது குறித்து தகவல் அறிந்ததும் உடனடியாக மீட்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
தண்ணீர் உள்ளிட்ட வழக்கமான பொருட்களைக் கொண்டு இந்த தீயை அணைக்க முடியாது என்பதால், ரசாயனத்தால் ஏற்படும் தீ விபத்தை அணைப்பதற்கான சிறப்பு உபகரணங்கள் கொண்டுவரப்பட்டு தீயை அணைக்கும் பணிகள் நடைபெற்றது. தற்போதைக்கு தீ கட்டுக்குள் இருந்தாலும், தொடர்ந்து நச்சுப் புகை வெளியேறி வருவதால் அந்த பகுதி முழுவதும் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
ரயில் தடம் புரண்ட இடத்தின் அருகே இருந்த வீட்டிலிருந்த மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றப்பட்டுள்ளதாகவும், நிலைமை தற்போதைக்கு கட்டுக்குள் இருப்பதாகவும் அம்மாகாண ஆளுநர் ஆண்டி பெஷார் தெரிவித்துள்ளார். இருப்பினும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயில் விபத்து காரணமாக அருகாமையில் உள்ள நெடுஞ்சாலையையும் அதிகாரிகள் மூடியுள்ளனர். இதனால் பல நூறு கிலோ மீட்டர்கள் சுற்றி வாகன ஓட்டிகள் பயணித்து வருகின்றனர்.