ஆசிய மாணவர்களுக்கு இலவச மருத்துவக் கல்வி ; 2026ம் ஆண்டு ஜப்பானில் தொடங்கவுள்ள புதிய திட்டம்
புதிய திட்டம் ஒன்றின்கீழ் ஆசிய நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் வருங்காலத்தில் ஜப்பானில் இலவசமாக மருத்துவக் கல்வி மேற்கொள்ளக்கூடும்.
ஜப்பானில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவக் கல்வி பயிலும் சில அனைத்துலக மாணவர்களுக்கான பாடக் கட்டணங்கள், வாழ்க்கைச் செலவுகள் ஆகியவற்றை ஏற்றுக்கொள்ள அந்நாட்டின் சுகாதார, தொழில், நலன் அமைச்சு திட்டமிட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அமைச்சு முதன்முறையாக இத்தகைய திட்டத்தை செயல்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது.
அனைத்துலக சமூகத்துக்குப் பங்காற்றுவதும் ஜப்பானிய மருத்துவக் கருவிகள், மருந்துகள் ஆகியவற்றை ஆசியாவில் பயன்படுத்த ஊக்குவிப்பதும் இம்முயற்சியின் இலக்குகளாகும்.
புதிய திட்டம், 2026ஆம் நிதியாண்டிலேயே தொடங்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்கீழ் சுமார் 20 மாணவர்களைச் சேர்த்துக்கொள்ள ஜப்பானின் சுகாதார, தொழில், நலன் அமைச்சு எண்ணம் கொண்டுள்ளது.
புதிய திட்டம் ஆக்கபூர்மாக இருக்கிறதா என்பதை ஆராய அது முதலில் நடைமுறையில் சோதித்துப் பார்க்கப்படும். ஆசியான், கிழக்கு ஆசிய வட்டாரங்களுக்கான பொருளியல் ஆய்வுக் கழகத்தின்வழி திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம்.
இந்தோனீசியாவில் தலைமையகத்தைக் கொண்டுள்ள அந்தக் கழகத்துக்கு ஜப்பான் நிதி வழங்கி வருகிறது.
இத்திட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் முதலில் அவரவர் நாட்டில் ஜப்பானிய மொழிப் பயிற்சி மேற்கொள்வர். அதற்குப் பிறகு அவர்கள் ஜப்பான் செல்வர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அந்த மாணவர்கள் மருத்துவராவதற்கான உரிமத்தைப் பெறும் நோக்குடன் ஜப்பானியப் பல்கலைக்கழகங்களில் உள்ள மருத்துவப் பள்ளிகளில் ஆறு ஆண்டுகள் கல்வி பயில்வர். அவர்களுக்கான கல்வி, வாழ்க்சைச் செலவுகளை ஜப்பானிய அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும்.
இத்திட்டத்துக்கான 290 மில்லியன் யென் தொகையை ஒதுக்க அமைச்சு திட்டமிட்டுள்ளது.புதிய திட்டத்துக்கு எந்தெந்த நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் தகுதிபெறுவர் போன்ற விவரங்களை ஜப்பானின் சுகாதார, தொழில், நலன் அமைச்சு இனி முடிவெடுக்கும்.