மலேசியாவில் வேலைவாய்ப்பு பெற்றுதருவதாகக் கூறி மோசடி : விசாரணைகள் ஆரம்பம்!
சில ஆட்சேர்ப்பு நிறுவனங்கள் வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுத்து பிறகு அவர்களை வேலையின்றி தவிக்கவிடும் சம்பவங்கள் மலேசியாவில் அரங்கேறி வருகின்ற நிலையில், இது குறித்து அந்நாட்டு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான குடியேறிகள் மலேசியாவில் வேலையின்றித் தவிப்பதாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் சென்ற வாரம் தகவல் வெளியிட்டிருந்தது.
அவர்களில் பெரும்பாலோர் பங்ளாதேஷையும் நேப்பாளத்தையும் சேர்ந்தவர்களாவர். அதிகமான தொகையை ஆட்சேர்ப்புக் கட்டணமாகச் செலுத்தி அவர்கள் மலேசியாவிற்கு சென்றுள்ளனர்.
அங்கு சென்ற பின்பே குறித்த தகவலை அறிந்துக்கொண்டுள்ளனர். இதனையடுத்து இந்த விவகாரங்கள் குறித்து மலேசிய அரசாங்கம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
மோசடியில் சிக்கித் தவிக்கும் வெளிநாட்டு ஊழியர்களில் சிலரை அரசாங்க வசிப்பிடங்களில் தங்கவைத்திருப்பதாகவும் அவர்களின் தங்குமிடச் செலவையும் சம்பளத்தையும் வழங்கும்படி சில நிறுவனங்களுக்கு உத்தரவிட்டிருப்பதாகவும் தொழிலாளர் துறை குறிப்பிட்டது.