பணத்திற்காக மனைவியை பலருக்கு திருமணம் செய்துவைத்து மோசடி
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் பாப்பனூத்து பகுதியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் (29) காற்றாலை ஒன்றில் திருத்துனராக தொழில்புரிந்து வருகிறார்.
இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு குழந்தை உள்ளனர். ஆனால் ராதாகிருஷ்ணனுக்கு மது பழக்கம் இருந்ததால் அவரது மனைவி அவரை விட்டு பிரிந்து சென்று விட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து அவருக்கு மறுமணம் செய்து வைக்க அவரது குடும்பத்தினர் பெண் பார்த்து வந்தனர்.
இதனை அறிந்து கொண்ட கேரள மாநிலம், கொழிஞ்சம்பாறை பகுதியைச் சேர்ந்த திருமண தரகர் ஒருவர் ராதாகிருஷ்ணனை அணுகியுள்ளார்.
அப்போது அவர் கேரளாவைச் சேர்ந்த ஒரு பெண்ணின் புகைப்படத்தை ராதாகிருஷ்ணனிடம் காண்பித்துள்ளார்.
அந்த படத்தில் இருந்த பெண்ணை ராதாகிருஷ்ணனுக்கும் பிடித்து விடவே உடனடியாக அந்த பெண்ணை ராதாகிருஷ்ணனுக்கு பேசி திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
அப்போது பெண் வீட்டில் வசதி இல்லாததால் உதவி செய்யும்படி தரகர் கேட்டுக் கொண்டுள்ளார்.
அதனை நம்பி ராதாகிருஷ்ணன் வீட்டார் அந்த பெண்ணுக்கு ஒன்றை சவரனில் நகை வாங்கி அணிவித்துள்ளனர்.
மேலும் தரகருக்கு ரூ.80 ஆயிரம் கமிஷன் கொடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து ராதாகிருஷ்ணனுக்கும், அந்தபெண்ணுக்கும் உடுமலை திருமூர்த்திமலை அமணலிங்கேசுவரர் கோவிலில் திருமணம் நடைபெற்றது. பின்னர் அவர்கள் தாராபுரத்திற்கு வந்தனர்.
அங்கு முதலிரவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. முதலிரவின் போது புதுப்பெண், ராதாகிருஷ்ணனிடம் “தனக்கு மாதவிடாய் என்றும், மற்றொரு நாள் முதலிரவை வைத்து கொள்வோம்” என்றும் கூறி நைசாக முதலிரவை தவிர்த்துவிட்டார்.
மறுநாள் தனது தாய்க்கு உடல்நிலை சரியில்லை, பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அவரை பார்க்க செல்ல வேண்டும் என்று தெரிவிக்கவே ராதாகிருஷ்ணன் தனது மனைவியை பொள்ளாச்சிக்கு அழைத்துச்சென்றுள்ளார்.
பொள்ளாச்சிக்கு சென்றதும் கடைக்கு சென்று வருவதாக சொல்லி சென்ற கேரள பெண் திடீரென மாயமாகிவிட்டார்.
நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வராததால் சோகத்துடன் தாராபுரத்திற்கு வந்த ராதாகிருஷ்ணன் நடந்த விவரத்தை தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.
இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. விசாரணையில், நகை, பணத்திற்காக ராதாகிருஷ்ணனை ஏமாற்றி கேரள பெண் திருமணம் செய்து இருப்பது தெரியவந்தது.
மேலும் அந்தப் பெண்ணின் கணவர் தான் திருமண புரோக்கர் போல் செயல்பட்டுள்ளார் என்பதும் தெரிய வந்தது. இந்த சம்பவம் தாராபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோல் திருமணம் ஆகாத பல வாலிபர்களிடம் பணம் மற்றும் நகையை பறிப்பதற்காக அந்த புரோக்கர் தனது மனைவியையே வேறு வாலிபர்களுக்கு திருமணம் செய்து வைத்து நூதன திருமண மோசடியில் ஈடுபட்டு வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர், குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.