ஆசியா, ஐரோப்பா இடையே ‘புதிய கூட்டணி’க்கு அழைப்பு விடுத்துள்ள பிரான்சின் மக்ரோன்

உலக வல்லரசுகளுக்கு இடையே சிக்கிக்கொள்ளும் நிலைக்கு எதிராக, புதிய கூட்டுறவில் இணைந்து செயலாற்றும் பிரஞ்சு அதிபர் இமானுவல் மெக்ரோன் ஆசியாவையும் ஐரோப்பாவையும் கேட்டுக்கொண்டுள்ளார்.
சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான போட்டியை உலகம் எதிர்நோக்கும் ஆகப்பெரும் அபாயம் என வர்ணித்த மெக்ரோன், அமெரிக்காவுடன் ஒத்துழைக்க விரும்புவதாகக் கூறினார்.சீனாவுடன் போட்டியிட்டாலும் அதனுடன் மோதுவதை விரும்பவில்லை என்று சிங்கப்பூரில் தற்போது நடைபெற்று வரும் ஷங்ரிலா கலந்துரையாடலில் கூறினார்.
உத்திபூர்வ தன்னாட்சி, அரசுரிமைச் சுதந்திரம் ஆகியவை தம் நாட்டின் கோட்பாடுகள் என்று கூறிய மெக்ரோன், பதற்றங்கள் சூழந்த உலகில் வல்லரசுகளின் ஆதிக்கநிலை மாறிவரும் நேரத்தில் ஐரோப்பாவுக்கும் ஆசியாவின் மற்ற நாடுகளுக்குமான மூன்றாம் வழியை விவரித்தார்.
“எந்தச் சார்பும் இல்லாமல் திகழ்வதற்கான காலம் தாழ்ந்துவிட்டது என்பதில் ஐயமில்லை. ஆயினும், கூட்டுறவு முறையில் செயல்படும் காலம் வந்துவிட்டது. ஒன்றாக இணைந்து செயல்பட முடிந்த நாடுகள் அனைத்து வழிமுறைகளையும் நாடவேண்டும்,” மெக்ரோன் மே 30ஆம் திகதியன்று கூறினார்.
“ஐரோப்பாவுக்கும் ஆசியாவுக்கும் இடையே நேர்மறையான, புதிய கூட்டுறவை உருவாக்குவோம்,” என்று மெக்ரோன் கூறினார்.உலக வல்லரசுகளின் முடிவுகளால் ஏற்படும் நிலையின்மைகளின் காரணமாக நம் நாடுகள் பாதிப்படையக்கூடாது என்பதை உறுதி செய்யும் பொதுவான பொறுப்பு நமக்கு உள்ளது, என்றும் மெக்ரொன் கூறினார்.
ஆசியாவுக்கும் ஐரோப்பாவும் இடையேயான பொது நடைமுறைகள், பொதுக் கொள்கைகள் ஆகியவற்றின் அடிப்படையில் புதிய கூட்டுறவை உருவாக்கலாம், என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.ஆசிய நாடுகளை, குறிப்பாக இந்தியாவை டிரான்ஸ்-பசிஃபிக் பங்காளித்துவத்திற்கான பரந்த, படிப்படியான ஒப்பந்தத்தில் இணையும்படி மெக்ரோன் கேட்டுக்கொண்டார்.
“வெளிப்படைத்தன்மையுடன், உண்மையான முறையில் நாம் செயலாற்றுவோம். ஆனால் தற்காப்பு, பாதுகாப்பு ஆகியவற்றிலும் மதிப்புமிக்க தொடருக்கான படிக்கற்களையும் கட்டமைப்போம்,” என்று அவர் கூறினார்.
காஸாவில் இஸ்ரேலின் நடத்தை மேற்கத்திய நாடுகள் கண்டும் காணாமலும் இருந்தால் அந்நாடுகள் தனது நம்பகத்தன்மையை ஒட்டுமொத்த உலகத்தின் முன்னிலையில் இழக்கும் என்று மெக்ரோன் வெள்ளிக்கிழமை இரவு எச்சரிக்கை விடுத்தார்.
அடுத்த சில மணி நேரத்திற்குள் மனிதாபிமான பதற்றநிலைக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் இஸ்ரேலுக்கு எதிரான ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலைப்பாடு மேலும் கடுமையாக்கப்படும் என்றும் மெக்ரோன் சனிக்கிழமை காலை ஷங்ரிலா கலந்துரையாடலுக்கிடையே நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது சூளுரைத்தார்.இருந்தபோதும், இது குறித்து அறிக்கை விடுத்த இஸ்ரேலின் தற்காப்பு அமைச்சு, மனிதாபிமான உதவின் நுழைவுக்கான வசதிகளை தன் அரசாங்கம் வழங்கி வருவதாகக் கூறியது.“உண்மை நிலவரம் பற்றி மெக்ரோனுக்கு அக்கறை இல்லை எனத் தோன்றுகிறது,” என்று இஸ்ரேலிய அறிக்கை குறிப்பிட்டுள்ளது.