பிரான்ஸில் 2 மடங்காக அதிகரிக்கப்படும் படைப்பிரிவு! பொது மக்கள் இணையலாம்

பிரான்ஸில் படைப்பிரிவினரின் எண்ணிக்கை 2 மடங்காக அதிகரிக்கப்படவுள்ளதால் ஆட்சேர்ப்பு பணி தொடங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, 17 வயதுக்கும் 72 வயதுக்கும் இடைப்பட்ட நல்ல தேகாரோக்கியம் கொண்ட குற்றப் பின்னணி அற்ற பிரெஞ்சுக் குடிமக்கள் இணையலாம்.
பிரான்ஸின் அரசுத் தலைமை பூகோள அரசியல் நிலவரத்தில் ஏற்பட்டுவருகின்ற மாற்றத்தை அடுத்து நாட்டின் பாதுகாப்புத் துறையைப் பலப்படுத்துகின்ற முயற்சிகளில் இறங்கியுள்ளது.
புதிய முதலீடுகள், ரிசேர்வ் படையை விரிவுபடுத்தல், கட்டாய இராணுவ சேவை எனப் பல்வேறு விடயங்கள் விவாதங்களில் பேசப்பட்டுவருகின்றன.
பிரான்ஸில் தற்சமயம் பொலிஸ், ஜொந்தாம் மற்றும் முப்படைகளின் செயற்பாட்டு ரிசேர்வ் பிரிவுகளில் 40ஆயிரம் வீரர்கள் உள்ளனர். அதனை 80 ஆயிரமாக அதிகரிக்க அரசு விரும்புகிறது.
ரிசேர்வ் படைவீரர் ஒருவர் இராணுவத்தைப் போன்றே சீருடை அணிவார். இராணுவப் பயிற்சிகள் அனைத்தையும் பெற்றிருப்பார். ஆனால் சாதாரண வாழ்வை வாழும் அவர்கள் மருத்துவராகவோ பொறியியலாளராகவோ வேறு தொழில் தொழில்துறைகளில் ஈடுபடுபவர்களாக இருப்பர்.
ஓராண்டு முதல் நான்கு ஆண்டுகள் வரை புதுப்பிக்கப்படத்தக்க ஒப்பந்தத்தின் அடிப்படையில் இயங்கும் இவர்களுக்கு அவர்களது தர நிலைக்கு ஏற்ப ஊதியம் வழங்கப்படும். வருடத்தில் குறைந்தது 60 நாட்கள் இராணுவப் பணிகளில் ஈடுபட வேண்டும். நாட்டின் எல்லைக்குள்ளேயும் வெளியேயும் நிலைமையைப் பொறுத்துப் பணிகள் விரிவடையலாம்.