பிரான்ஸில் குழந்தைகளுக்கான சமூக ஊடகத் தடையை விரைப்படுத்துமாறு உத்தரவு!
பிரான்ஸில் 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கான சமூக ஊடகத் தடை அமுலுக்கு வருவதை விரைவுப்படுத்துமாறு அந்நாட்டு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் (Emmanuel Macron) அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் பிரெஞ்சு ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட அவர், முன்மொழியப்பட்ட சட்டம் விரைவில் செனட் சபையில் நிறைவேற்றப்படுவதற்கு ஏற்ற வகையில், துரிதப்படுத்தப்பட்ட நடவடிக்கையை ஆரம்பிக்குமாறு அரசாங்கத்திடம் கேட்டுக் கொண்டதாக கூறியுள்ளார்.
“நமது குழந்தைகள் மற்றும் நமது இளைஞர்களின் மூளை விற்பனைக்கு இல்லை என்றும், இளைஞர்களின் உணர்ச்சிகள் அமெரிக்க அல்லது சீன தளங்களால் கையாளப்படுவதற்கு இடமளிக்கப்படாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கம் மற்றும் அதிகப்படியான திரை நேரத்திலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க வடிவமைக்கப்பட்ட சட்டங்களை கடுமையாக்குவதால், சமூக ஊடகத் தடையை பரிசீலிப்பதாக பிரித்தானியா அறிவித்துள்ளது. பிரித்தானியாவின் அறிவிப்பை தொடர்ந்து மக்ரோனின் கருத்துக்கள் வந்துள்ளன.
இதேவேளை பிரான்சின் சுகாதார கண்காணிப்பு அமைப்பின் கூற்றுப்படி, இரண்டு இளைஞர்களில் ஒருவர் ஒரு நாளைக்கு இரண்டு முதல் ஐந்து மணி நேரம் வரை ஸ்மார்ட்போனில் செலவிடுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதேபோல் டிசம்பரில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், 12 முதல் 17 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் சுமார் 90% பேர் தினமும் இணையத்தை அணுக ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துவதாகவும், அவர்களில் 58% பேர் சமூக வலைப்பின்னல்களுக்காக தங்களின் சொந்த சாதனங்களைப் பயன்படுத்துவதாகவும் தெரியவந்துள்ளது.





