மலேசியாவில் எட்டாவது மாடியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த நான்கு வயது குழந்தை

மலேசியாவின் சிலாங்கூர் மாநிலக் குடியிருப்புக் கட்டடம் ஒன்றின் எட்டாவது மாடியிலிருந்து விழுந்ததில் நான்கு வயது குழந்தை உயிரிழந்தது.
போர்ட் கிள்ளானில் உள்ள ஸ்ரீ பெரந்தாவ் அடுக்குமாடிக் கட்டடத்தில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 1) காலை அந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக தெற்கு கிள்ளான் நகரக் காவல்துறை துணை ஆணையர் கமாலாரிஃபின் அமான் ஷா கூறினார்.
சம்பவம் நிகழ்ந்தபோது அந்த ஆண் குழந்தையின் தந்தை வேலைக்குச் சென்றிருந்ததாகவும் தாயார் தமது இரண்டாவது குழந்தையை குழந்தை பராமரிப்பு மையத்தில் விடச் சென்றிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
எட்டாவது மாடியிலில் இருந்து வீட்டின் ஜன்னலில் இருந்து குழந்தை விழுந்ததாக சந்தேகிக்கப்படுகிறது என்று கூறிய அவர் சம்பவம் குறித்து காலை 8 மணியளவில் பெண் ஒருவரிடமிருந்து காவல்துறைக்குத் தகவல் கிடைத்தாகத் தெரிவித்தார்.
கீழே விழுந்த குழந்தை அவசரமாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. இருப்பினும், சிகிச்சை பலனின்றி அது இறந்துவிட்டது.
உயரத்தில் இருந்து விழுந்ததால் குழந்தையின் தலையில் காயங்கள் ஏற்பட்டதாக சடலப் பரிசோதனை அறிக்கை கூறியது.சம்பவம் தொடர்பாக காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
குழந்தைக் கவனிப்பில் அலட்சியம் காட்டுவது குற்றம் என்றும் அதற்கு 20 ஆண்டு வரையிலான சிறைத் தண்டனை, 50,000 ரிங்கிட் (S$15,260) வரையிலான அபராதம் ஆகியன விதிக்கப்படலாம் என்றும் கமாலாரிஃபின் தெரிவித்தார்.