கேரளாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் தூக்கிட்டு தற்கொலை

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் வக்கம் பகுதியை சேர்ந்தவர் அனில் குமார் (வயது 55). இவரது மனைவி சிஜா (வயது 50). இந்த தம்பதிக்கு அஸ்வின் (வயது 25), ஆகாஷ் (வயது 22) என 2 மகன்கள் இருந்தனர்.
அனில் குமார் அப்பகுதியிலுள்ள கூட்டுறவு வங்கியில் ஊழியராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், அனில் குமார், மனைவி சிஜா, மகன்கள் அஸ்வின் , ஆகாஷ் என குடும்பத்தினர் 4 பேரும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர்.
காலை வெகுநேரமாகியும் வீடு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.
அப்போது, வீட்டில் உள்ள அறையில் குடும்பத்தினர் 4 பேரும் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்துள்ளனர். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார், 4 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் கடன் பிரச்சினையால் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.