ஜராக்கண்ட்டில் நிலக்கரி சுரங்க விபத்தில் சிக்கி நால்வர் உயிரிழப்பு

இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ராம்கர் மாவட்டத்தில் காலிசெய்யப்பட்ட கரிமச் சுரங்கத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் குறைந்தது நால்வர் கொல்லப்பட்டனர்.
சென்ட்ரல் கோல்ஃபீல்ட்ஸ் லிமிட்மெட் (சிசிஎல்) நிறுவனத்தின் கர்மா திட்டப் பகுதியில் சட்டவிரோத சுரங்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக நம்பப்படுகிறது. வெள்ளிக்கிழமை (ஜூலை 4) இரவு சம்பவம் நேர்ந்தது.
குஜூ ராணுவப் பகுதியில் சம்பவம் நிகழ்ந்தது. மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன; இந்தச் சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.
நால்வரின் உடல்கள் சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்டதை காவல்துறையினர் உறுதிப்படுத்தினர். மேலும் பலர் சிக்கியிருந்ததாகவும் அதிகாரிகள் வந்தடைவதற்கு முன்பு சில உடல்கள் மீட்கப்பட்டதாகவும் அப்பகுதி கிராமவாசிகள் கூறினர்.
சம்பவ இடத்தில் வெடிப்பை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து சுரங்கம் கவிழ்ந்ததாக ராம்கர் காவல்துறை சூப்பரின்டென்டன்ட் தெரிவித்தார்.
சம்பவ இடம் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக இருந்தது; எனினும், வறுமை, விதிமுறைகள் சரியாக அமல்படுத்தப்படாதது ஆகிய காரணங்களினால் கிராமவாசிகள் அவ்விடத்துக்கு அடிக்கடி சென்றுவந்ததாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் குறிப்பிட்டனர்.
சம்பவம் நிகழ்ந்த பிறகு ஆத்திரமடைந்த கிராமவாசிகள் திட்டப் பணிகளுக்கான அலுவலகத்துக்கு வெளியே கூடினர். மாண்டோரின் உடல்களை அலுவலகத்துக்கு வெளியே வைத்து இழப்பீடு வழங்குமாறு அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
காயமடைந்த ஒருவரின் உறவினர் கவனக்குறைவுடன் நடந்துகொண்டதாக சிசிஎல் நிறுவனத்தின் மீது குற்றஞ்சாட்டினார். சம்பவத்தில் சிலர் மாண்டதை உறுதிப்படுத்திய சிசிஎல், தங்களுக்கிடையே தகவல்கள் சேகரிக்கப்பட்டவுடன் முழு ஆய்வு வெளியிடப்படும் என்று தெரிவித்தது.
சம்பவத்தைத் தொடர்ந்து அரசியல் தரப்பிலிருந்து பலர் கண்டனம் தெரிவித்தனர். ஜார்க்கண்ட் எதிர்க்கட்சித் தலைவரும் ஜார்க்கண்ட் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) தலைவருமான பாபுலால் மராண்டி, ஹேமந்த் சோரனின் தலைமையிலான மாநில அரசாங்கத்தைச் சாடினார். சட்டவிரோத சுரங்க நடவடிக்கைகளை அவர் கண்டுகொள்ளவில்லை என்று அவர் கண்டனம் தெரிவித்தார்.
அதற்குப் பதிலளித்த காங்கிரஸ் பொதுச் செயலாளரும் ஊடகங்களைக் கவனிக்கும் பொறுப்பில் இருப்பவருமான ராகேஷ் சின்ஹா, சம்பந்தப்பட்ட சுரங்கம் மத்திய சுரங்க அமைச்சின்கீழ் கவனிக்கப்படுவதாகக் குற்றஞ்சாட்டினார்.