ரஷ்யாவின் வோல்கோவ் நதியில் மூழ்கி இந்திய மாணவர்கள் நால்வர் மரணம்
ரஷ்யாவின் வடமேற்கில் பாயும் வோல்கோவ் நதியில் மூழ்கி இந்திய மாணவர்கள் நால்வர் உயிரிழந்ததாக இந்திய வெளியுறவு அமைச்சு ஜூன் 7ஆம் திகதி தெரிவித்துள்ளது.நீரில் மூழ்கிய மேலும் ஒரு மாணவர் உயிருடன் மீட்கப்பட்டதாகவும் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் அது கூறியது.
மாணவர்கள் நீரில் மூழ்கிய சம்பவம் எப்போது நடந்தது என்று தெளிவாகத் தெரியவில்லை.இறந்த நால்வரில் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் இருவரின் சடலங்களைத் தேடும் பணி தொடர்கிறது.
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த அந்த மாணவர்கள் வெலிகி நொவ்கோரோட்டில் உள்ள யாரோஸ்லொவ்-த-வைஸ் நொவ்கோரோட் ஸ்டேட் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயின்றதாக இந்தியா டுடே இணையத்தளம் தெரிவித்தது.
மாணவர்கள் நடைப்பயிற்சிக்குச் சென்றபோது ஆற்றில் மாணவி ஒருவர் எதிர்பாராவிதமாக நீரில் இழுத்துச் செல்லப்பட்டதாகவும் உடனிருந்த நான்கு மாணவர்கள் அவரை மீட்க முயன்றதாகவும் அதில் நால்வர் உயிரிழந்ததாகவும் கூறப்பட்டது.
உயிரிழந்த நால்வரில் மூவர் உடன்பிறந்தவர்கள். அவர்களில் ஒருவர் சம்பவத்தின்போது பெற்றோருடன் காணொளி அழைப்பில் தொடர்பிலிருந்ததாகத் தெரிகிறது.
மாணவர்கள் அனைவரும் 18 வயதுக்கும் 20 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்று இந்திய ஊடகங்கள் கூறுகின்றன.
இறந்த மாணவர்களின் உடல்களைத் தாயகம் கொண்டுவருவதன் தொடர்பில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள இந்தியத் துணைத் தூதரகம் உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றுவதாக இந்திய வெளியுறவு அமைச்சின் அறிக்கை கூறியது.