இந்தியாவில் பூட்டப்பட்ட காருக்குள் சிக்கிய மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்த நான்கு குழந்தைகள்

ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் துவாரபுடி கிராமத்தில் காருக்குள் சிக்கி மூச்சுத் திணறி 4 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
துவாரபுடியைச் சேர்ந்த பார்லி ஆனந்த் – உமா தம்பதி, சுரேஷ் – அருணா தம்பதி, பவானி ஆகியோர் ஒரே பகுதியில் வசித்து வருகின்றனர். இவர்கள் வீட்டின் அருகில் திருமண விழா நடைபெற்று வந்த நிலையில், அங்கு பாடல் ஒளிபரப்பப்பட்டது.
இந்நிலையில் குழந்தைகள் விளையாடுவதற்காக வீட்டின் அருகே தெருவில் நிறுத்தப்பட்டிருந்த காருக்குள் சென்று விளையாடியுள்ளனர். காருக்குள் அமர்ந்து விளையாடியபோது திடீரென்று காரின் கதவு தானாக மூடிக்கொண்டது.
கார் கதவுகள் தானாக பூட்டிக்கொண்ட நிலையில் வெளியே வர முடியாத குழந்தைகள் கூச்சலிட்டனர். அவர்கள் கத்தியது பாட்டு சத்தத்தில் கேட்காததால் நான்கு பேரும் காருக்குள் மூச்சுத் திணறி மயக்கமடைந்தார்.
இதையடுத்து நீண்ட நேரம் ஆகியும் குழந்தைகள் திரும்பி வராததால், பெற்றோர், உறவினர்கள் அவர்களைத் தேடிப் பார்த்தபோது நிறுத்தப்பட்டிருந்த காரில் அவர்கள் நான்கு பேரும் மயங்கி கிடப்பது தெரியவந்தது.
இதனையடுத்து கார் கண்ணாடியை உடைத்து கதவை திறந்து நான்கு பேரையும் மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு நான்கு பேரையும் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே அவர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தால் துவாரபூடி கிராமத்தில் துக்கச் சூழல் நிலவியது. தொடர்ந்து இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்துள்ள போலிசார் விசாரணை நடத்துகின்றனர்.