சீனாவில் கனடியர் நால்வருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காகச் சீனாவில் இவ்வாண்டு கனடியர் நால்வருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.கனடிய அதிகாரிகள் இதனை உறுதிப்படுத்தியுள்ளனர்.
அந்நால்வரும் இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் என்றும் அவர்களின் அடையாளம் வெளியிடப்படவில்லை என்றும் கனடிய வெளியுறவு அமைச்சர் மெலானி ஜோலி தெரிவித்தார்.
அந்நால்வரும் குற்றமிழைத்ததற்கு உறுதியான சான்றுகள் உள்ளன என்றும் சட்டப்படியே நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும் சீன வெளியுறவு அமைச்சு வியாழக்கிழமை (மார்ச் 20) விளக்கமளித்தது.இதனிடையே, பொறுப்பற்ற கருத்துகளை வெளியிடுவதை நிறுத்திக்கொள்ளும்படி கனடாவிற்கு அந்நாட்டிலுள்ள சீனத் தூதரகத்தின் பேச்சாளர் வலியுறுத்தியுள்ளார்.
வழக்கில் தொடர்புடைய கனடியர்களின் உரிமைகளுக்கும் நலன்களுக்கும் சீனா முழு உத்தரவாதம் அளித்தது என்ற தூதரகம், சீனாவின் நீதித்துறை இறையாண்மையை மதிக்கும்படியும் கனடாவைக் கேட்டுக்கொண்டது.
இரட்டைக் குடியுரிமையைச் சீனா அங்கீகரிப்பதில்லை. போதைப்பொருள் குற்றங்களை அது கடுமையானதாகக் கருதுகிறது.ஆயினும், அந்நாட்டில் வெளிநாட்டினருக்கு மரண தண்டனை விதிக்கப்படுவது அரிதாகவே இடம்பெறுகிறது.
அந்நால்வர் தொடர்பான வழக்கை மாதக் கணக்கில் அணுக்கமாகக் கண்காணித்து வந்ததாகவும் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உள்ளிட்ட அதிகாரிகளின் துணையுடன் மரண தண்டனை நிறைவேற்றத்தை நிறுத்த முயன்றதாகவும் மெலானி கூறினார்.
இதனிடையே, “சீன அதிகாரிகள், கனடியக் குடிமக்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்றியது மனிதத்தன்மையற்ற, அதிர்ச்சி அளிக்கும் செயல். கனடா விழித்துக்கொள்ள வேண்டும்,” என்று ‘ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் கனடா’ அமைப்பைச் சேர்ந்த கெட்டி நிவ்யபந்தி தெரிவித்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாகவே சீனா – கனடா இடையிலான உறவு கசந்துவரும் நிலையில், சீனாவின் அண்மைய நடவடிக்கை அதனை மேலும் மோசமாக்கலாம் என அஞ்சப்படுகிறது.