ஜப்பானில் 50 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் முன்னாள் டாக்ஸி ஓட்டுநர் கைது

போதைமருந்து கொடுத்து, பெண் பயணி ஒருவரைப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய சந்தேகத்தின்பேரில் முன்னாள் டாக்சி ஓட்டுநர் ஒருவரைக் கைதுசெய்துள்ளதாக ஜப்பானியக் காவல்துறை வியாழக்கிழமை (மே 22) தெரிவித்தது.அவரால் மேலும் பலர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர் தமது டாக்சியில் அல்லது வீட்டில் கிட்டத்தட்ட 50 பெண்களைப் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கியது தொடர்பில் ஏறக்குறைய 3,000 காணொளிகளையும் படங்களையும் காவல்துறை கண்டுபிடித்துள்ளதாக இரு ஜப்பானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சென்ற ஆண்டு 20 வயதுகளில் இருந்த ஒரு பெண்ணுக்குத் தூக்க மருந்து கொடுத்து, தமது வீட்டிற்குத் தூக்கிச் சென்ற அந்த நபர், அங்கே அவரிடம் தகாத முறையில் நடந்துகொண்டு, அதனைப் படமாகவும் பதிவுசெய்தார்,” என்று தோக்கியோ காவல்துறைப் பேச்சாளர் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
பாலியல் தொடர்பான குற்றங்களை இழைத்த சந்தேகத்தின்பேரில் அந்த 54 வயது நபரைக் காவல்துறை புதன்கிழமை கைதுசெய்ததாக அப்பேச்சாளர் கூறினார்.அவரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் தலைமுடியில் தூக்க மருந்திற்கான தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக ஊடகத் தகவல்கள் கூறின.
கடந்த 2008ஆம் ஆண்டிலிருந்தே அவர் அச்செயலில் ஈடுபட்டு வந்ததை அவரது கைப்பேசியிலும் மற்றக் கருவிகளிலும் கண்டுபிடிக்கப்பட்ட காணொளிகள் காட்டுவதாகவும் கூறப்படுகிறது.
இன்னொரு பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து, 40,000 யென் (S$360) பணத்தைக் கொள்ளையடித்த சந்தேகத்தின்பேரில் சென்ற ஆண்டு அக்டோபரில் அவர் கைதுசெய்யப்பட்டதாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பின்னர் அவர் விடுவிக்கப்பட்டதாகவும் பாலியல் குற்றங்களுக்காக அவர் டிசம்பரில் மீண்டும் கைதுசெய்யப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.