இலங்கையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இந்தியாவில் கைது

போலி முகவரிச் சான்று ஆவணங்களைப் பயன்படுத்தி இந்திய பாஸ்போர்ட்டைப் பெற்றதாகக் கூறி, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், தமிழக காவல்துறையின் Q பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இலங்கையின் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த (EPDP) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன், தற்போது தமிழ்நாட்டின் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மதுரை பாஸ்போர்ட் அலுவலகத்தில் இருந்து இந்திய பாஸ்போர்ட்களைப் பெறுவதற்காக போலி முகவரிச் சான்றுகளைச் சமர்ப்பித்ததாகக் கூறப்படும் சில இலங்கையர்கள் மீதான 2019 வழக்குடன் இந்தக் கைது தொடர்புடையது.
விசாரணையின் ஒரு பகுதியாக, அனைத்து விமான நிலையங்களிலும் திலீபனுக்கு எதிராக ஒரு லுக்அவுட் நோட்டீஸ் வெளியிடப்பட்டது.
பிப்ரவரி 11 அன்று அவர் கொச்சின் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியபோது, இந்திய குடியேற்ற அதிகாரிகள் அவரைக் கைது செய்து மதுரை ‘Q பிரிவு’ போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
2019 ஆம் ஆண்டில் ஒரே தெருவில் தங்கியிருந்த 60 இலங்கையர்கள் இந்திய பாஸ்போர்ட்களைப் பெற்றதாக வெளியான பின்னர், போலி பாஸ்போர்ட் வழக்கு தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தது.