ராணுவச் சட்ட நடவடிக்கைகளைத் தற்காத்துப் பேசிய தென்கொரிய முன்னாள் பாதுகாப்பு அமைச்சர்
கிளர்ச்சி, அதிகார துஷ்பிரயோக குற்றங்களுக்காக விசாரிக்கப்பட்டு வரும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கிம் யங்-ஹியூன், அதிபர் யூன் சுக் இயோலால் டிசம்பர் 3ல் அறிவிக்கப்பட்ட ராணுவச் சட்டம் அறிவிப்பை நியாயப்படுத்தி, அவரது உத்தரவின் கீழ் இடம்பெற்ற ராணுவ நடவடிக்கைகளை தற்காத்துப் பேசியுள்ளார்.
“அரசுக்கு எதிரான சக்திகளை ஒழிப்பதற்காகவும், எதிர்காலத் தலைமுறைக்கான சுதந்திர கொரியாவை நிலைநாட்டுவதற்காகவும் ராணுவச் சட்டம் கொண்டுவரப்பட்டது. எனது ஆலோசனையின் பேரில் அதிபர் ராணுவச் சட்டம் அறிவித்தார் என்பதை நாம் அனைவரும் அறிவோம்,” என்று சோலின் கிழக்கு தடுப்பு மையத்திலிருந்து வெளியிடப்பட்ட அறிக்கையில் அவர் கூறினார்.
“அதிபர் அறிவித்த ராணுவச் சட்டத்தின் கீழ் நான் கட்டளையிட்டதால், தளபதிகள், வீரர்கள் மீது எந்த தவறும் இல்லை. அது ராணுவ உறுப்பினர்களாக தங்களின் கடமைகளை நியாயமாகவும் மரியாதையுடனும் நிறைவேற்றுவதாகும்,” என்றார் அவர்.
டிசம்பர் 3, 4 ஆகிய திகதிகளில் ஆறு மணி நேரம் ராணுவச் சட்டம் நடப்பில் இருந்தபோது, ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்ட கிம் உள்ளிட்ட பல ராணுவத் தளபதிகள் விசாரணையில் உள்ளனர்.
வழக்கு விசாரணை ராணுவத்தை அவமதிக்கும் செயலாகும் என்று முன்னாள் தற்காப்பு அமைச்சர் கிம் கூறினார். ராணுவச் சட்டம் ஏன் கிளர்ச்சிக்கான செயலாக கருதப்பட வேண்டும் என்பதற்கான ஆதாரங்களையோ அல்லது சட்டபூர்வமான காரணத்தையோ அவர்கள் முன்வைக்கவில்லை என்றார் அவர்.
சிவில் துறையில் அதிபரை வெளிப்படையாக விமர்சிப்பவர்களுடன் நாடாளுமன்றம், அரசாங்கத்தில் உள்ள முக்கிய பிரமுகர்கள், கைது செய்ய ராணுவத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்பதை உயர்மட்ட ராணுவத் தளபதிகள், அரசாங்க அதிகாரிகளின் சாட்சியங்கள் காட்டுகின்றன.
நாடாளுமன்றம், தேசிய தேர்தல் ஆணையத்திற்கு படைகள் அனுப்பப்பட்டன. முன்னாள் தற்காப்புத் தலைவர், கடந்த தேர்தல்களில் மோசடி இடம்பெற்றதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்காகவே தேர்தல் ஆணையத்துக்கு படையினர் அனுப்பட்டதாகக் கூறினார்.