இந்தியாவில் குடும்பத்தார் மீது துப்பாக்கி சூடு நடத்திய முன்னாள் காவல்துறை அதிகாரி; மகன் சம்பவ இடத்திலேயே பலி

பஞ்சாப் மாநிலத்தில் ஓய்வுபெற்ற காவல்துறை உயரதிகாரி ஒருவர் தன் குடும்பத்தினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.சம்பவத்தில் அவரது மகன் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் கூறுகின்றன.
அமிர்தசரஸ் நகரைச் சேர்ந்த தர்சிம் சிங், ‘CRPF’ காவல்படையில் உயரதிகாரியாகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். அவருக்கு மனைவியர் இருவர். முதல் மனைவிக்கு ஒரு மகன் உள்ளார். அவருக்குத் திருமணமாகிவிட்டது.
தர்சிம் சிங்கிற்கும் அவரது முதல் மனைவிக்கும் சிறிது காலமாகவே சொத்துத் தகராறு நிலவுவதாகத் தெரிகிறது.
தர்சிம் சிங்கின் முதல் மனைவி, அமிர்தசரஸ் நகரின் மஜத் சாலையில் தனது மகன், மருமகளுடன் வசித்துவருகிறார்.
வியாழக்கிழமை (ஜூலை 3) அந்த வீட்டுக்குச் சென்ற சிங்கிடம் மூவரும் சேர்ந்து, சொத்து தொடர்பில் தகராறு செய்ததாகவும் அதனால் ஆத்திரமடைந்த தர்சிம் சிங் தனது துப்பாக்கியால் மூவரையும் சுட்டதாகவும் கூறப்படுகிறது.
சிங்கின் மகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரின் முதல் மனைவியும் மருமகளும் கடுமையாகக் காயமடைந்தனர்.
துப்பாக்கியால் சுட்ட சத்தம் கேட்டு அங்கு விரைந்த அக்கம்பக்கத்தினர் சிங்கின் முதல் மனைவி, மருமகளை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.தப்பியோட முயன்ற தர்சிம் சிங்கைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.