முன்னாள் மலேசியப் பிரதமர் முகைதீன் மீது தேச துரோக குற்றச்சாட்டு
மலேசியாவின் எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் பிரதமருமான முகைதீன் யாசின் மீது தேச துரோக குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன.
நாட்டின் முன்னாள் மாமன்னரை அவர் இழிவுப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.முகைதீன் மீது குற்றம் சுமத்தப்பட்டது குறித்து ஆகஸ்ட் 27ஆம் திகதியன்று அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.தம்மீது சுமத்தப்பட்ட தேச துரோக குற்றச்சாட்டை முகைதீன் மறுத்துள்ளார்.
2020ஆம் ஆண்டுக்கும் 2021ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் ஏறத்தாழ 17 மாதங்களுக்கு மலேசியாவின் பிரதமராகப் பதவி வகித்த முகைதீன் மீது கிளந்தான் மாநிலத்தில் உள்ள நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டது.
குற்றச்சாட்டை மறுத்துவிட்டு முகைதீன் அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.ஆனால் முகைதீன் 20,000 ரிங்கிட் (S$6,000) பிணைத்தொகை செலுத்த வேண்டும் என்றும் முன்னாள் மாமன்னரை அவர் மீண்டும் குறைகூறக்கூடாது என உத்தரவிட வேண்டும் என்றும் அரசாங்க வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டதாக முகைதீனின் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் உதவித் தலைமைச் செயலாளர் தக்கியுதீன் ஹசான் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அரசு வழக்கறிஞர்களின் கோரிக்கைகள் மிகவும் கடுமையானவை என்றும் தேச துரோகக் குற்றங்களுக்கான அதிகபட்ச அபராதம் 5,000 ரிங்கிட் என்றும் பாஸ் கட்சியின் தலைமைச் செயலாளருமான தக்கியுதீன் கூறினார்.
ஆகஸ்ட் 17ஆம் திகதியன்று, கிளந்தானில் உள்ள நெங்கிரி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது.ஆகஸ்ட் 14ஆம் திகதி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய முகைதீன், முன்னாள் மாமன்னர் அப்துல்லா அகமது ஷாவின் நம்பகத்தன்மை குறித்து முகைதீன் கேள்வி எழுப்பினார்.
2022ஆம் ஆண்டு நடைபெற்ற மலேசியப் பொதுத் தேர்தலில் எந்த ஒரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.இதன் காரணமாகத் தொங்கு நாடாளுமன்றம் ஏற்பட்டது.
இந்நிலையில், அரசாங்கம் அமைக்க போதுமான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தமக்குக் கிடைத்தும் அப்போதைய மாமன்னர் தம்மைப் பிரதமராக ஏற்காததற்கான காரணத்தைக் கேட்டு முகைதீன் ஆகஸ்ட் 15ஆம் திகதியன்று சர்ச்சையை ஏற்படுத்தினார்.
அன்வார் இப்ராகிம்மை, அப்போதைய மாமன்னரான சுல்தான் அப்துல்லா நியமித்தார்.பாகாங் சுல்தான் அப்துல்லாவின் மாமன்னர் பதவிக்காலம் 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் நிறைவடைந்தது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் முகைதீனுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையும் அதிகபட்சம் 5,000 ரிங்கிட் (S$1,500) அபராதமும் விதிக்கப்படலாம்.முகைதீன் மீது ஊழல், கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கிய குற்றச்சாட்டுகளும் கடந்த ஆண்டு பதிவாகின.
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அக்குற்றச்சாட்டுகள் தம்மீது சுமத்தப்பட்டதாக முகைதீன் கூறினார்.அரசியலில் தனக்குப் போட்டியாக இருப்பவர்களைக் குறிவைத்து அவர்களை முடக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என்று பிரதமர் அன்வார் தலைமையிலான அரசாங்கம் தெரிவித்துள்ளது.உயர்மட்ட அளவில் நிகழும் ஊழல் குற்றங்களை முறியடிக்க இந்நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக அது கூறியது.