பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசி ( Nicolas Sarkozy) நிபந்தனைகளுடன் விடுதலை!
லிபியத் தலைவர் கடாபியிடமிருந்து மில்லியன் கணக்கான யூரோக்களை சட்டவிரோதமாக பெற்றமை தொடர்பில் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசியை ( Nicolas Sarkozy) நிபந்தனைகளுடன் விடுதலை செய்ய பாரிஸ் மேல்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன்படி, அவர் இன்று (10) சிறையிலிருந்து வெளியேறுவார் என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைய அவர், பிரெஞ்சு பிரதேசத்தை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், நீதித்துறை மேற்பார்வையின் கீழ் வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் வழக்கில் முக்கிய நபர்களான இணை பிரதிவாதிகள் மற்றும் சாட்சிகளுடன் தொடர்பு கொள்ள தடை விதிக்கப்படும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 25 அன்று அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதிலிருந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இருப்பினும், தன் மீதான குற்றச்சாட்டுகளை அவர் மறுத்து வருகிறார்.
இந்நிலையில் காணொளி மூலம் விசாரணைக்கு முன்னிலையாகிய அவர், நீதிக்கான அனைத்து தேவைகளையும் எப்போதும் பூர்த்தி செய்வதாகவும், 70 வயதில் சிறையில் இருப்பேன் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் “நான் செய்யாத ஒன்றை ஒருபோதும் ஒப்புக்கொள்ள மாட்டேன்” என்றும் அவர் கூறியுள்ளார்.
லிபியத் தலைவர் கடாபியிடமிருந்து மில்லியன் கணக்கான யூரோக்களை சட்டவிரோதமாகப் பெற்ற நிக்கோலஸ் சர்கோசியை ( Nicolas Sarkozy) குறித்த நிதியை 2007 தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




