முன்னாள் பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசி(Nicolas Sarkozy) சிறையில் அடைப்பு

பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசி(Nicolas Sarkozy), தலைநகர் பாரிசில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார்.
பிரான்ஸில் கடந்த 2007ம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் நிக்கோலஸ் சர்கோசி வெற்றி பெற்று ஜனாதிபதியானார். அப்போது தேர்தல் பிரச்சாரத்துக்காக லிபியாவின் அப்போதைய ஜனாதிபதி மாமர் கடாஃபியிடம் இருந்து சட்டவிரோதமாக நிதி பெற்றதாகவும், இதற்கு பிரதிபலனாக, தனித்துவிடப்பட்ட லிபியாவுக்கு சர்வதேச அரங்கில் பிரான்ஸ் ஆதரவாக செயல்படும் என நிக்கோலஸ் சர்கோசி உறுதி அளித்ததாகவும் தெரியவந்தது.
இது தொடர்பான வழக்கில் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்துக்காக லிபியாவிடம் நிதி பெற்றது சட்டவிரோதம் என கூறிய நீதிபதிகள், சர்கோசிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பதாக கடந்த செப்டம்பர் 25ம் திகதி தீர்ப்பளித்தனர். தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்த சர்கோசி, தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்போவதாகக் கூறினார்.
இந்நிலையில், பாரிசில் உள்ள சிறையில் நிக்கோலஸ் சர்கோசி அடைக்கப்பட்டார். முன்னதாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “நான் எந்தக் குற்றமும் செய்யவில்லை. நான் ஒரு அப்பாவி.” என தெரிவித்திருந்தார்.
நிகோலஸ் சர்கோசியின் மேல்முறையீட்டு மனு நிலுவையில் உள்ள நிலையில், அவரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளதையும், 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையையும் அவர் எதிர்த்துள்ளார்.
சிறைக்குச் செல்வதற்காக வீட்டில் இருந்து வெளியே வந்த நிகோலஸ் சர்கோசி, தனது மனைவியின் கைகளைப் பிடித்தவாறு நடந்து வந்தார். அவர் பொது வீதிக்கு வந்த உடன் அவரை சூழ்ந்து கொண்ட அவரது ஆதரவாளர்கள், அவருக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பினர். தனது மகன், மகள், பேரக்குழந்தைகளுக்கு ஆறுதல் தெரிவித்த சர்கோசி, பின்னர் காரில் ஏறி சிறைக்குப் புறப்பட்டார்.
பாதுகாப்பு காரணங்களுக்காக சர்கோசி தனிமைச் சிறையில் அடைக்கப்படுவார் என்றும், மற்ற கைதிகள் அவரை நெருங்க முடியாது என்றும் அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.