சிங்கப்பூரில் பாதாளச் சாக்கடையில் வசிக்கும் வெளிநாட்டவர்கள்?
சிங்கப்பூரில் சட்டத்திற்கு புறம்பாக வந்த நபர்கள் சட்டவிரோதமாக தங்க வைக்கப்படுவதாக சந்தேகம் எழுந்த நிலையில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
அதற்கு மேலதிகமாக தொழிற்சாலை பகுதிகளில் உள்ள காலி கட்டிடங்களில் இவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
சிங்கப்பூர் காவல் படை, குடிநுழைவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) ஆகியவை JTC கார்ப்பரேஷனின் உதவியுடன் இந்த சோதனையை மேற்கொண்டது.
அப்போது, சுங்கே கடுத் தொழிற்சாலை பகுதியில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் உட்பட அனுமதி பெறாத நபர்களை வெளியேற்ற ஒரு நடவடிக்கையை மேற்கொண்டது.
இந்த சோதனை நடவடிக்கையின் போது யாரும் கைது செய்யப்படவில்லை, ஆனால் அந்த பகுதியில் அமைந்துள்ள காலியான கட்டிடம் ஒன்று போதைப்பொருள் பயன்படுத்தும் இடமாக இருந்ததை அதிகாரிகள் கண்டறிந்தனர்.
மேலும் 90cm அகலமும் 2m உயரமும் கொண்ட மறைவான வடிகால் அவர்களின் மறைவிடமாக பயன்படுத்தப்படுவதாக சொல்லப்பட்டுள்ளது. அங்கு கயிற்றில் ஈரமான ஆடைகள் தொங்குவதையும், மரப்பலகைகள் அடங்கிய தற்காலிக படுக்கையையும் காண முடிந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த படுக்கையில் காலி பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் ஒரு சிறிய மருந்து குப்பியும் இருந்ததாக கூறப்பட்டுள்ளது. அதற்கு அருகில் உள்ள காலி தொழிற்சாலை கட்டிடம், சட்டவிரோதமாக குடியேறியவர்கள் அங்கு மறைந்திருப்பதற்கான அறிகுறிகளையும் காட்டியதாக சொல்லப்பட்டுள்ளது.
உள்ளே சிகரெட் துண்டுகள், பீர் கேன்கள், டிஷ்யூ பேப்பர்கள் தரையில் சிதறிக் கிடந்தன. சுவர்களில் பெரிய துளைகள் செதுக்கி இருந்தது, அதாவது சோதனையின் போது விரைவாக வெளியேற இந்த வழி அமைக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
அருகிலுள்ள மற்றொரு காலியான கட்டிடத்தில் போதைப்பொருள் பயன்படுத்தப்பட்டதற்கான அடையாளங்கள் இருந்தன. ஏனெனில், சந்தேகத்திற்குரிய கட்டுப்படுத்தப்பட்ட போதைப்பொருள் மற்றும் கத்திகளையும் அங்கு போலீஸ் அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அந்த வழக்கு மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.