ஜப்பானில் குவியும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் – விசா கட்டணங்களை அதிகரிக்கப் பரிசீலனை
ஜப்பானுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வருகையைக் கட்டுப்படுத்த, விசா கட்டணங்களை அதிகரிக்க அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.
2026 நிதியாண்டின் தொடக்கத்தில் இருந்து வெளிநாட்டு விசா கட்டணங்களை உயர்த்துவது குறித்துப் பரிசீலித்து வருவதாக ஜப்பான் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
தற்போதைய விசா கட்டணங்கள் சர்வதேச தரத்தை விடக் குறைவாக உள்ளன. இந்நிலையில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு இணையாகக் கட்டணங்களை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளதாக ஜப்பானிய வெளியுறவு அமைச்சர் தகேஷி இவாயா (Takeshi Iwaya) தெரிவித்துள்ளார்.
தற்போது, ஜப்பானுக்கான ஒற்றை நுழைவு விசாவுக்கு சுமார் 20 டொலர் வசூலிக்கப்படுகிறது. இது அமெரிக்காவின் 185 டொலர் மற்றும் பிரித்தானியாவின் 177 டொலர் கட்டணங்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவானதாகும்.
கடந்த ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் ஜப்பானுக்கு வருகை தந்த வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 31.65 மில்லியனாக உயர்ந்து சாதனை படைத்துள்ளது.
இதனையடுத்து விசா கட்டண உயர்வானது, இந்த அதிகப்படியான சுற்றுலாப் பயணிகளின் வருகையைக் கட்டுப்படுத்த உதவும் என்று அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
ஜப்பான், சீனா மற்றும் பிலிப்பைன்ஸ் உட்பட 120க்கும் மேற்பட்ட நாடுகளின் குடிமக்கள் குறுகிய கால விசாக்களுக்காக விண்ணப்பிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.





