இலங்கை தொடர்பில் வெளிநாடுகள் கொடுத்த எச்சரிக்கையை திரும்பப் பெறும் – விஜித ஹேரத்!
நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
எனவே எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று தினங்களில் இலங்கை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள பயண ஆலோசனைகளை வெளிநாடுகள் வாபஸ் பெற்றுக்கொள்ளும் என அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
அறுகம்பே பகுதியில் வசிக்கும் வெளிநாட்டவர்கள் குறிவைத்து தாக்குதல் நடத்தலாம் என அமெரிக்கா நேற்று (23) பயண ஆலோசனையை வழங்கியது, பின்னர் பிரித்தானியா, ரஷ்யா, இஸ்ரேல், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளும் தங்களது சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டன.
இது தொடர்பில் இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் விஜித ஹேரத் கருத்து வெளியிட்டுள்ளார்.
“அடுத்த சில நாட்களில் இந்த நிலை முழுமையாக சீரடையும். அப்போது பல வெளிநாடுகள் கொடுத்த எச்சரிக்கை நோட்டீஸ்களை நீக்கிவிடலாம். நாங்கள் எடுத்த நடவடிக்கைகளில் அவர்கள் ஏற்கனவே திருப்தி அடைந்துள்ளனர். எனவே, அவர்கள் தங்கள் தரப்பில் நம்பிக்கையை பெற்றுள்ளனர் எனக் குறிப்பிட்டுள்ளார்.