இந்தியாவில் முதன்முறையாக இரண்டரை நாளேயான பச்சிளங்குழந்தையின் உடல் தானம்
இரண்டரை நாளேயான குழந்தையின் உடலை மருத்துவ ஆய்வுக்காக அதன் குடும்பம், இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத் தலைநகர் டேராடூனில் உள்ள டூன் மருத்துவமனைக்குத் தானமாக வழங்கியுள்ளது.
இந்தியாவில் இவ்வளவு வயது குறைவான ஒருவரின் உடல் இதற்கு முன்பு தானமாக வழங்கப்பட்டதில்லை என்று இந்திய ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
சரஸ்வதி என்று பெயர் சூட்டப்பட்ட அக்குழந்தை மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டிருந்தது. பிறந்து சிறிது நேரத்திலேயே அக்குழந்தை இறந்துவிட்டது.
அதனைத் தொடர்ந்து குழந்தையின் உடல் தானமாக வழங்கப்பட்டது. இந்தியாவில் பிறந்த குழந்தையின் உடல் தானமாக வழங்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை எனக் கருதப்படுகிறது.
பெரும் சோகத்துக்கு ஆளான சரஸ்வதியின் குடும்பம், மருத்துவக் கல்விக்கும் ஆய்வுக்கும் பங்காற்றும் நோக்குடன் இந்தக் கடினமான முடிவை எடுத்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“இதயம் தொடர்பான நோய் இருந்ததால் அந்தப் பெண் குழந்தை புதன்கிழமை காலை இறந்துவிட்டது,” என்று ஹரித்வாரைச் சேர்ந்த டாக்டர் ராஜேந்திர சைனி குறிப்பிட்டார்.
குழந்தையின் தந்தையான ராம் மிஹிர், ஹரித்துவாரில் ஆலை ஊழியராகப் பணியாற்றுகிறார்.குழந்தையின் உடல் உறுப்புகளைத் தானமாக வழங்குமாறு டாக்டர் சைனி, குழந்தையின் குடும்பத்தைக் கேட்டுக்கொண்டதாகத் தகவல்கள் வெளியாயின.