ரஷ்யாவில் உணவு நச்சுத்தன்மையால் பலர் பாதிப்பு : மூவர் கைது
மாஸ்கோவில் 120 க்கும் மேற்பட்டோர் மற்றும் பிற நகரங்களில் டஜன் கணக்கானவர்கள் உணவு நச்சுத்தன்மையால் நோய்வாய்ப்பட்டதை அடுத்து ரஷ்ய புலனாய்வாளர்கள் மூன்று பேரை கைது செய்து குற்றஞ்சாட்டியுள்ளனர்.
கடுமையான குற்றங்களைக் கையாளும் ரஷ்யாவின் விசாரணைக் குழு, உணவு உற்பத்தி நிறுவனத்தின் தலைவரையும், உணவு விநியோக சேவைக்கான இயக்குநர் மற்றும் தரக் கட்டுப்பாட்டுத் தலைவரையும் கைது செய்ததாகக் கூறியது.
உடலின் நரம்புகளைத் தாக்கி சுவாசப் பிரச்சனைகள் மற்றும் தசை முடக்கத்தை உண்டாக்கும் அரிதான, உயிருக்கு ஆபத்தான நோயான போட்யூலிசம் போன்ற அறிகுறிகளுடன் 120 பேர் மாஸ்கோவில் மருத்துவர்களை அணுகியதாக Interfax செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
நோயைத் தூண்டும் பாக்டீரியாக்கள் மோசமாகப் பாதுகாக்கப்பட்ட உணவில் உடலில் நுழையும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மாஸ்கோவிற்கு கிழக்கே உள்ள நகரங்களான கசான் மற்றும் நிஸ்னி நோவ்கோரோடில் கிட்டத்தட்ட 30 பேர் போட்யூலிசம் அறிகுறிகளுடன் மருத்துவமனைகளுக்கு வந்துள்ளனர் என்று Interfax தெரிவித்துள்ளது.
மூன்று நகரங்களிலும் மக்கள் தீவிர சிகிச்சையில் உள்ளனர்.
இன்டர்ஃபாக்ஸ் மேற்கோள் காட்டிய மாஸ்கோவில் உள்ள ஒரு அதிகாரி, நோயாளிகள் தொடர்ந்து கண்காணிப்பில் இருப்பதாகவும், அவர்களின் அறிகுறிகள் உயிருக்கு ஆபத்தானவை அல்ல என்றும் கூறியுள்ளார்.
ஆய்வக சோதனை அறிக்கைகளை சமர்ப்பிக்கத் தவறியது மற்றும் மோசமான உற்பத்திக் கட்டுப்பாட்டில் ஈடுபடுவது உள்ளிட்ட பல சுகாதார மற்றும் தொற்றுநோயியல் தரநிலைகளை உணவு நிறுவனங்கள் மீறியுள்ளதாக விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.