இனவாத அரசியல் குறித்து பொன்சேகா எச்சரிக்கை!
நாட்டில் இனவாதத்தை தூண்டுவதற்கு சில அரசியல்வாதிகள் முற்படுகின்றனர்.இது தொடர்பில் மகா சங்கத்தினர் விழிப்பாக இருக்க வேண்டும் என்று முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
“ பௌத்த மதமே இந்நாட்டில் பிரதான மதம் என்ற கருத்தில் மாற்று கருத்து கிடையாது. நானும் சிங்கள பௌத்தன்தான்.பௌத்த மதத்தை பாதுகாத்து வந்துள்ளோம்.
எனினும், சில அரசியல்வாதிகள் இனவாதத்தை தூண்டுகின்றனர். தமது நலனுக்காகவே அவர்கள் இவ்வாறு செயல்படுகின்றனர். இது தொடர்பில் மக்கள், மகா சங்கத்தினர் விழிப்பாக இருக்க வேண்டும்.
அண்மையில் திருகோணமலையில் பிரச்சினையொன்று ஏற்பட்டது. நாட்டில் சட்டம் இருந்தால் அது அனைவருக்கும் சமமானதாக இருக்க வேண்டும்.”- எனவும் பொன்சேகா குறிப்பிட்டார்.
அதேவேளை, கடந்த காலங்களில் ஊழல், மோசடிகளில் ஈடுபட்டவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு இடமளிக்க கூடாது எனவும் அவர் வலியுறுத்தினார்.





