தாய்லாந்தில் 100,000ஐ தாண்டிய ஃப்ளூ தொற்று – ஒன்பது பேர் பலி

தாய்லாந்தில் இவ்வாண்டு இதுவரை சளிக்காய்ச்சலால் மொத்தம் 107,570 பேர் பாதிக்கப்பட்டுவிட்டனர்.
சளிக்காய்ச்சல் காரணமாக ஒன்பது பேர் உயிரிழந்து விட்டதாகத் தாய்லாந்துப் பொதுச் சுகாதார அமைச்சு செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 18) தெரிவித்தது.
ஒவ்வொரு வாரமும் ஏறத்தாழ 15,000 பேருக்குச் சளிக்காய்ச்சல் தொற்றுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 10,000ஆக இருந்தது என்று தாய்லாந்து நோய்க் கட்டுப்பாட்டுத் துறையின் செய்தித் தொடர்பாளர் டாக்டர் ஜுராய் வோங்சாவாட் கூறினார்.
எண்ணிக்கை அடிப்படையில் ஆக அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் ஐந்து வயதுக்கும் ஒன்பது வயதுக்கும் இடைப்பட்ட சிறுவர்கள்.அதையடுத்து, நான்கு வயதுக்கும் குறைவானவர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டனர்.
பெரும்பாலானோர் A/H1N1 கிருமியால் பாதிக்கப்பட்டதாக தாய்லாந்துச் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சளிக்காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டவர்களில் ஒன்பது பேர் உயிரிழந்துவிட்டதாகக் குறிப்பிட்ட டாக்டர் ஜுராய், உயிரிழந்தவர்களில் ஆக இளையவருக்கு 11 வயது என்றும் ஆக மூத்தவருக்கு 86 வயது என்றும் தெரிவித்தார்.
உயிரிழந்த அனைவரும் ஏற்கெனவே சளிக்காய்ச்சலுக்கான தடுப்பூசியைப் போட்டுக்கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பள்ளிகள், சிறைச்சாலைகள், ராணுவ முகாம்களில் சளிக்காய்ச்சல் தொற்று அதிகம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.