டெக்சாஸை உலுக்கிய வெள்ளம் – பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட டிரம்ப்

டெக்சாஸ் மாநிலத்தில் ஏற்பட்ட கடும் வெள்ளச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்ப் நேற்று பார்வையிட்டனர்.
கடந்த ஜூலை 4ஆம் திகதி தொடர் கனமழையால் குவாடலுபே ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த திடீர் வெள்ளத்தில் சிக்கி 36 குழந்தைகள் உட்பட 120 பேர் உயிரிழந்தனர். பலர் இன்னும் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்களைத் தேடும் மீட்புப் பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.
வெள்ளம் ஏற்படுத்திய அழிவுகளையும், மீட்பு நடவடிக்கைகளையும் நேரில் பார்வையிட்ட டிரம்ப், பல்வேறு மீட்பு பணியாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுடன் உரையாடினார்.
இந்த சூழ்நிலையை சரிவர கையாளாததாக மாநில மற்றும் உள்ளாட்சி அரசுகளைச் சாடும் குற்றச்சாட்டு சில அமைப்புகளிடமிருந்து எழுந்துள்ளது. எனினும், இந்த குற்றச்சாட்டுகளை டிரம்ப் முற்றாக மறுத்தார். “அரசும், மீட்பு குழுவும் மிகுந்த தீவிரத்துடன் பணியாற்றி வருகின்றன. இதுபோன்ற பேரழிவை கையாள்வது எளிதல்ல,” என அவர் தெரிவித்துள்ளார்.
வெள்ள பாதிப்புகளை தீர்க்கும் முயற்சியில் மக்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய நேரம் இது எனவும் டிரம்ப் வலியுறுத்தினார். “இந்தத் தாக்கத்திலிருந்து மீள நமக்கு நேரம் தேவை. ஆனால் நாங்கள் தைரியமாக இருக்கிறோம்,” என்றும் அவர் கூறினார்.