மத்திய வியட்நாமில் வெள்ளப்பெருக்கு ;குறைந்தது 9 பேர் பலி, 5 பேர் மாயம்
வியட்நாமில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் குறைந்தது ஒன்பது பேர் உயிரிழந்ததாகவும், ஐவர் காணாமல் போயுள்ளனர் என்று இன்று(29) அரசாங்கம் தெரிவித்தது.
வெள்ளத்தில் 103,000க்கும் மேற்பட்ட வீடுகளும் மூழ்கியுள்ளன. நாட்டின் பிரபல சுற்றுலாத் தளங்களான ஹியூ(Hue) மற்றும் ஹோய் ஆன்(Hoi An) உள்ளிட்ட நகரங்களை வெள்ளம் பாதித்துள்ளதாக அரசாங்கப் பேரிடர் அமைப்பின் அறிக்கை தெரிவித்தது.
அதனால் அங்கு அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மீட்பு, நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அது குறிப்பிட்டது.
வரலாற்றுச் சிறப்புமிக்க ஹோய் ஆன் நகரம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் அப்பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் படகுகள் மூலம் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.
வியட்நாமின் வடக்கு திசையில் உள்ள ஹனோய்(Hanoi), தெற்கு திசையில் உள்ள ஹோ சி மின்(Ho Chi Minh) நகரங்களுக்கு இடையிலான ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. இதனால், ஆயிரக்கணக்கான பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
அங்கு திங்கட்கிழமை (27) இரவு வரையிலான 24 மணிநேரத்தில், வரலாற்றில் முதல் முறையாக 1,085.8 சென்டி மீட்டர் மழை பெய்தது பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.





