வெள்ளத்தால் பாதிப்புக்கள் : வடகொரியாவுக்கு ரஷ்யா மனிதாபிமான உதவி
பெருமழையாலும் வெள்ளத்தாலும் பாதிப்படைந்துள்ள வடகொரியாவுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்க ரஷ்யா முன்வந்திருப்பதாக வடகொரிய அரசாங்க ஊடகமான கேசிஎன்ஏ ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 4) தெரிவித்துள்ளது.
வடகொரியத் தலைநகரான பியோங்யாங்கில் உள்ள ரஷ்யத் தூதரகத்திலிருந்து சனிக்கிழமை (ஆகஸ்ட் 3) ரஷ்ய அதிபரின் அனுதாபங்களும் ஆதரவும் தெரிவிக்கப்பட்டது. இவ்விரு நாடுகளின் நெருக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக உடனடி உதவிகளை மேற்கொள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் தயாராக இருப்பதாக கேசிஎன்ஏ ஊடகம் கூறியது.
தமது அரசாங்கம் ஏற்கெனவே மீட்புப் பணிகளை மேற்கொண்டுள்ளதால் உதவி தேவைப்படும்போது அழைப்பு விடுக்கப்படும் என்று வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் பதிலளித்துள்ளார் என்றும் அச்செய்தி நிறுவனம் தெரிவித்தது.
சில நாள்களாக பெய்துவரும் கடும் மழை வடகொரியாவின் வடமேற்குப் பகுதிகளை மோசமாக பாதித்துள்ளது. வெள்ளத்தின் காரணமாக 4,000 வீடுகளிலிருந்த 5,000 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவசர உதவி நடவடிக்கைகள் நடந்துவரும் அப்பகுதிகளை அதிபர் கிம் நேரடியாகச் சென்று பார்வையிட்டார்.
இருநாட்டுத் தலைவர்களும் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொண்டதும் முழுமையான உத்திபூர்வ கூட்டமைப்புக்கான ஒப்பந்தங்களை ஜுன் மாதம் ஏற்படுத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இதனிடையே தென்கொரிய அதிபர் யூன் சுக் இயோல் வெள்ள நிவாரண உதவிகளைப் பற்றி பேச்சுவார்த்தை நடத்த இருநாட்டு ஒருங்கிணைப்பை நிர்வகிக்கும் அதன் அமைச்சு தயாராக உள்ளதாக கடந்த வியாழக்கிழமை விடுத்த கோரிக்கைக்கு வடகொரியா பதிலளிக்கவில்லை.