வெள்ள அனர்த்தம்: சிலாபம் வைத்தியசாலையில் 1,200 மில்லியன் ரூபா இழப்பு!
வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட சிலாபம் மாவட்ட வைத்தியசாலையில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் விசேட ஆய்வினை மேற்கொண்டார்.
வெள்ள அனர்த்தம் காரணமாக சிலாப மாவட்ட வைத்தியசாலையில் ஆயிரத்து 200 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான சேதம் ஏற்பட்டுள்ளது.
“ இரு முக்கிய கட்டிடங்களின் கட்டுமானப் பணிகள் விரைவுபடுத்தப்படும். தற்போதுள்ள வளாகத்தை விட உயர் தரத்தில் வைத்தியசாலை கட்டப்படும்.” என்று சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதன்போது உறுதியளித்தார்.
வெளிநோயாளர் பிரிவு, மருத்துவமனை வளாகம், வார்டுகள், மருந்தகம், அவசர சிகிச்சை பிரிவு, ஹீமோடையாலிசிஸ் பிரிவு, அறுவை சிகிச்சை பிரிவு, ஆய்வகம் என்பவற்றை அமைச்சர் பார்வையிட்டார்.
அத்துடன், இரத்த வங்கி, எக்ஸ்ரே சிகிச்சை பிரிவு, சி.டி ஸ்கான் சிகிச்சை பிரிவு, மருத்துவ குடியிருப்புகள், மற்றும் சுகாதார ஊழியர் குடியிருப்புகள் உள்ளிட்ட பிரிவுகளையும் பார்வையிட்டார்.
அதன்பின்னர் மருத்துவமனையின் எதிர்கால சேவைகளை செயல்படுத்துவதற்கான செயல் திட்டம் மற்றும் முக்கிய தேவைகள் தொடர்பில் கேட்டறியப்பட்டது.
சிலாபம் மாவட்ட பொது மருத்துவமனையின் நிபுணர்கள் மற்றும் மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதார ஊழியர்கள் கருத்துகளை முன்வைத்தனர்.
குறித்த வைத்தியசாலையின் அபிவிருத்திக்காக இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் இருந்து சுமார் 650 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது,
அந்த பணத்தைப் பயன்படுத்தி வைத்தியசாலையில் தற்போது கட்டுமானத்தில் உள்ள இரண்டு கட்டிட தொகுதிகளின் விரைவான அபிவிருத்தி குறித்து சிலாபம் மாவட்ட பொது மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் சுமித் அத்தநாயக்க தனது கருத்துக்களை முன்வைத்தார்.





