துருக்கியில் வெடிமருந்து தொழிற்சாலையில் பயங்கர குண்டுவெடிப்பு – ஐவர் மரணம்
துருக்கியின் தலைநகரான அங்காராவில் உள்ள வெடிபொருள் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஐந்து தொழிலாளர்கள் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அங்காராவுக்கு வெளியே 40 கிமீ (25 மைல்) தொலைவில் உள்ள எம்கேஇ ராக்கெட் மற்றும் வெடிபொருள் தொழிற்சாலையில் இந்த வெடிப்பு ஏற்பட்டது.
அங்காரா மாகாண கவர்னர் வஹாப் சாஹின் செய்தியாளர்களிடம் கூறுகையில், “ரசாயன பரிசோதனையின் விளைவாக தொழிற்சாலையின் டைனமைட் பிரிவில் வெடிப்பு ஏற்பட்டது” என்று தொழில்நுட்ப ஊழியர்கள் தெரிவித்தனர்.
“துரதிர்ஷ்டவசமாக ஐந்து தொழிலாளர்கள் இறந்துள்ளனர், அவர்களின் குடும்பங்களுக்கு எங்கள் இரங்கல்கள்” என்று சாஹின் கூறினார். துருக்கியின் பாதுகாப்பு அமைச்சகமும் ஒரு தனி அறிக்கையில் இறந்தவர்களின் எண்ணிக்கையை உறுதிப்படுத்தியது.
காயம் அடைந்த தொழிற்சாலை ஊழியர்கள் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக, சம்பவம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக அரச ஊடகம் தெரிவித்துள்ளது.