இந்தியாவில் அரசு மருத்துவமனையில் தீ விபத்து ; 190க்கும் மேற்பட்ட நோயாளிகள் மீட்பு

இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலம், குவாலியர் நகரிலுள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் சனிக்கிழமை நள்ளிரவு தீப்பற்றியது.அதனைத் தொடர்ந்து, அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த 190க்கும் மேற்பட்ட நோயாளிகள் அங்கிருந்து மீட்கப்பட்டு, வேறு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தில் உயிருடற்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும் அவர்கள் கூறினர்.
கமலா ராஜா மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்த குளிரூட்டி இரவு 1 மணியளவில் தீப்பிடித்ததாகச் சொல்லப்படுகிறது. அம்மருத்துவமனை கஜ்ரா ராஜா மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து, பாதுகாவலர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவின் சன்னல் கண்ணாடிகளை உடைத்து, உள்ளிருந்த 13 நோயாளிகளை மீட்டனர்.பின்னர் மற்ற சிகிச்சைப் பிரிவுகளில் இருந்த கிட்டத்தட்ட 180 நோயாளிகளும் மீட்கப்பட்டனர்.
நோயாளிகள் அனைவரும் அதே வளாகத்தில் இருக்கும் சிறப்பு நிபுணத்துவ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர் என்று மாநில மக்கள் தொடர்புத் துறை வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.
குளிரூட்டி தீப்பற்றியதற்கு மின்கசிவு காரணமாக இருக்கலாம் எனக் கருதப்படுவதாகவும் அவ்வறிக்கை குறிப்பிட்டது.
“தீப்பற்றியதை அடுத்து மருத்துவமனை வளாகம் முழுவதையும் புகை சூழ்ந்தது. ஊழியர்கள் உடனடியாக நோயாளிகளை அப்புறப்படுத்தும் பணியைத் தொடங்கினர். அந்நேரத்தில் எதுவுமே கண்ணுக்குப் புலப்படவில்லை,” என்று நோயாளி ஒருவருடன் தங்கியிருந்தவர் விவரித்தார்.