கொள்ளுப்பிட்டி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நிதி உதவி : ஜனாதிபதி பணிப்புரை
கொழும்பு, கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி சுற்றுவட்டத்துக்கு அருகில் இன்று வெள்ளிக்கிழமை (06) காலை பஸ் மீது மரம் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஐந்து இலட்சம் ரூபா நிதியுதவி வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, போக்குவரத்து அமைச்சுக்கும் இலங்கை போக்குவரத்து சபைக்கும் உரிய பணிப்புரைகளை வழங்கியுள்ளார்.
மேலும் வீதி ஓரங்களில் முறிந்து விழும் அபாயத்தில் உள்ள பாரிய மரங்கள் தொடர்பில் உடனடியாக ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் ஆலோசனை வழங்கியுள்ளார்.
கொள்ளுப்பிட்டியில் பஸ் ஒன்றின் மீது மரம் முறிந்து வீழ்ந்த சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்த போதே, அவர் இந்த விடயங்களை தெரிவித்தார்.
மக்களுக்கு உயிராபத்தை ஏற்படுத்தும் மரங்களை உடனடியாக அப்புறப்படுத்துமாறு அவர் பணித்துள்ளார்.
இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின் அதிகாரிகளுக்கு அவர் இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார்.
மத்திய சுற்றாடல் அதிகார சபை, வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற அதிகாரிகளையும் இந்த நடவடிக்கையில் இணைத்துக்கொள்ளுமாறு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.