வாக்னர் கூலிப்படையால் அச்சம்… எல்லைகளை மூடும் இரு ஐரோப்பிய நாடுகள்
ரஷ்யாவின் வாக்னர் கூலிப்படை காரணமாக பெலாரஸ் நாட்டுடனான எல்லைகளை மூடும் முடிவுக்கு வந்துள்ளதாக போலந்து மற்றும் லிதுவேனியா நாடுகள் அறிவித்துள்ளன.
குறித்த தகவலை லிதுவேனியா துணை உள்விவகார அமைச்சர் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார். அவர் குறிப்பிடுகையில், பெலாரஸ் நாட்டுடனான எல்லைகளை மூடும் முடிவுக்கு வந்துள்ளது உண்மைதான். எல்லையை மூடும் வாய்ப்பு அதிகரித்துள்ளது என்றார்.
ரஷ்யாவில் ஜூன் மாதம் ஆயுத கிளர்ச்சி ஒன்றை ஏற்படுத்த முயன்று தோல்வியை எதிர்கொண்ட நிலையில், வாக்னர் கூலிப்படை தற்போது பெலாரஸ் நாட்டில் தஞ்சமடைந்துள்ளது.இந்த நிலையிலேயே வாக்னர் கூலிப்படை காரணமாக எல்லையை மூடும் முடிவுக்கு போலந்து மற்றும் லிதுவேனியா இரு நாடுகளும் எட்டியுள்ளன.
மட்டுமின்றி, புலம்பெயர் மக்களின் போர்வையில் வாக்னர் கூலிப்படையினர் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள் நுழையும் வாய்ப்புகள் இருப்பதாக லிதுவேனியா நிர்வாகம் மேற்கத்திய நாடுகளை தொடர்ந்து எச்சரித்தும் வந்துள்ளது.மேலும், புலம்பெயர் மக்களில் சில குழுவினர் தங்கள் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தும் நிலையும் உருவாகலாம் என லிதுவேனியா அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, வாக்னர் கூலிப்படையினர் பெலாரஸ் நாட்டில் சுற்றுலாவுக்கு வரவில்லை என போலந்தின் ஆளும் கட்சி தலைவர் குறிப்பிட்டுள்ளார். அவர்கள் அங்கே சிக்கலை உருவாக்குவார்கள் எனவும், முதன்மையாக போலந்துக்கு எதிராகவே அவர்களின் நடவடிக்கை இருக்கும் எனவும் எச்சரித்துள்ளார்.
இதுபோன்ற சிக்கலை எதிர்கொள்ள போலந்து தயார் நிலையில் இருக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். போலந்து மற்றும் லிதுவேனியா ஆகிய இரண்டு நாடுகளும் பெலாரஸ் மற்றும் ரஷ்யாவுடனான தங்கள் எல்லைகளில் வேலிகளை அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.