மகனுக்காக பதவி துறந்த அப்பா! சஜித் அணிக்குள் நடப்பது என்ன?
கொழும்பு மாநகர சபையில் நடந்த அரசியல் சமரில் ஆளுங்கட்சி (NPP) வெற்றிபெற்றுள்ள நிலையில், பின்னடைவை சந்தித்த ஐக்கிய மக்கள் சக்திக்குள் (SJP) உள்ளக மோதல் வெடித்துள்ளது.
இதனால் ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவரான மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கலாநிதி சி.வை.பி. ராம் C.Y.P. Raam கட்சியில் வகித்த அனைத்து பதவிகளையும் துறந்துள்ளார்.
கொழும்பு மாநகரசபையின் வரவு- செலவுத் திட்டம் கடந்த 22 ஆம் திகதி முன்வைக்கப்பட்டபோது மேலதிக மூன்று வாக்குகளால் அது தோற்கடிக்கப்பட்டது.
ஆதரவாக 57 வாக்குகளும், எதிராக 60 வாக்குகளும் அளிக்கப்பட்டன. பாதீட்டை தோற்கடிப்பதற்கு கூட்டு எதிரணிக்கு ஐக்கிய மக்கள் சக்தி தலைமைத்துவம் வகித்திருந்தது.
இந்நிலையில் கொழும்பு மாநகரசபையின் வரவு- செலவுத் திட்டம் நேற்று இரண்டாவது தடவை முன்வைக்கப்பட்டு, இரு மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
58 உறுப்பினர்கள் ஆதரவாகவும், 56 பேர் எதிராகவும் வாக்களித்தனர். இரண்டு உறுப்பினர்கள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.
வாக்கெடுப்பில் பங்கேற்காத தமது கட்சி உறுப்பினரான டானியல் ராமின் கட்சி உறுப்புரிமையை ஐக்கிய மக்கள் சக்தி இடைநிறுத்தியுள்ளது. சிவைபி ராமின் மகனே டானியல் ராம் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது மகனுக்கு எதிராக கட்சி நடவடிக்கை எடுத்த நிலையிலேயே சி.வை.பி.ராம் ராஜினாமா செய்துள்ளார்.
வடகொழும்பு பிரதான அமைப்பாளர், ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினர் மற்றும் கட்சியின் உதவிச் செயலாளர் ஆகிய பதவிகளையே அவர் துறந்துள்ளார்.
ஆனால், தனிப்பட்ட காரணங்களுக்காகவே பதவி துறந்ததாக அவர் கூறியுள்ளார்.
கொழும்பு மாநகரசபையில் வாக்கெடுப்பு நடந்த தினத்தில் தனது மகன் கொழும்புக்கு வெளியில் இருந்தார் எனவும், தவிர்க்க முடியாத காரணத்தால் அவரால் பங்கேற்க முடியாமல் போனது என சி.வை.பி. ராம் கூறியுள்ளார்.
நானோ அல்லது எனது மகனோ அரசியல் டீல்களுக்கு அடிபணிபவர்கள் அல்லர் எனவும் அவர் குறிப்பிட்டார்.





