இலங்கையை உலுக்கிய கோர விபத்து : உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை!

கரடிஎல்ல பகுதியில் இன்று (11) காலை ஏற்பட்ட பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
அதன்படி, விபத்தில் இறந்தவர்களுக்கு தலா ஒரு மில்லியன் ரூபாய் இழப்பீடு வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.
நுவரெலியா-கம்போல பிரதான சாலையில், ரம்பொடவின் கரடியெல்ல பகுதியில் இன்று (11.05) காலை இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது பதினைந்து பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்தில் 35க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து நடந்த நேரத்தில் பேருந்து கதிர்காமத்திலிருந்து நுவரெலியா வழியாக குருநாகலுக்கு சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.