வயல் காவலுக்குச் சென்றவர் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு!!
திருகோணமலை- நாமல்வத்த பகுதியில் வயல் காவலுக்குச் சென்றவர் எரிந்த நிலையில் இன்று (26) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு மீட்கப்பட்டவர் அதே பகுதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான எம். தாசுதீன் (61வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
ஞாயிற்றுக்கிழமை இரவு அவருடைய வயலுக்கு காவலுக்குச் சென்றவர் இன்று (26) ம் திகதி 01 மணிவரைக்கும் வீட்டுக்கு வராத காரணத்தினால் அவரைத் தேடி பக்கத்து வீட்டார் சென்றுள்ளனர்.
இந்நிலையில் குறித்த நபர் வயலில் அமைக்கப்பட்டிருந்த கூடாரத்துக்கு உள்ளே குளிர் காரணமாக தீ மூட்டிய நெருப்புக்குள் தவறுதலாக விழுந்து எரிந்த நிலையில் கிடந்ததாகவும் பொலிஸ் வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து மொரவெவ பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று குறித்த சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
குறித்த மரணம் தொடர்பில் மொரவெவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





