ஊக்கமருந்து பாவனையால் பிரபல இத்தாலி டென்னிஸ் வீரருக்கு தடை

உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீரராக இத்தாலியின் ஜெனிக் சின்னர் இருந்து வருகிறார்.
கடந்த மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆஸ்திரேலியா ஓபன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றார். தொடர்ந்து இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்று சாதனைப்படைத்தார்.
இவருக்கு கடந்த மாதம் கைவிரலில் காயம் ஏற்பட்டது. காயம் உடனடியாக குணமடைய அவருக்கு உதவியாளர்கள் க்ளொஸ்டெபோல் (Clostebol) என்ற ஊக்கமருந்தை கொடுத்துள்ளனர். சின்னருக்கு இது தடைசெய்யப்பட்டது என்பது தெரியாமல் உட்கொண்டுள்ளார்.
உலக ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு (WADA) கடந்த வருடம் மார்ச் மாதம் பரிசோதனை மேற்கொண்டபோது க்ளொஸ்டெபோல் பயன்படுத்தியது தெரியவந்தது. இரண்டு முறை சோதனை மேற்கொண்டபோது பாசிட்டிவ் ரிசல்ட் வந்தது.
இதனால் உலக ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு சின்னருக்கு தடைவிதித்தது. இதை எதிர்த்து சர்வதேச டென்னிஸ் ஒருமைப்பாடு அமைப்பில் (International Tennis Integrity Agency) மேல்முறையீடு செய்தார். அப்போது தற்செயலாக சின்னருக்கு தெரியாமல் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இதனால் தண்டனை ரத்து செய்யப்படுகிறது எனத் தெரிவித்தது.
இதை எதிர்த்து விளையாட்டுக்கான நடுவர் மன்றத்தில் WADA மேல்முறையீடு செய்தது. இந்த நிலையில் WADAவின் தண்டனையை ஏற்றுக்கொள்ள சின்னர் முடிவு செய்தார்.
இதனால் டென்னிஸ் போட்டியில் கடந்த 9ந்தேதியில் இருந்து மே 4ந்தேதி வரை தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த கால இடைவெளியில் சின்னர் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க முடியாது.
சின்னர் தடையை ஏற்றுக்கொண்டதால் WADA விளையாட்டுக்கான நடுவர் மன்றத்தில் இருந்து வழக்கை வாபஸ வாங்க இருக்கிறது.
இந்த தடைக்காலம் சின்னரின் பிரெஞ்ச் ஓபனை பாதிக்கிறது. இவரது தடைக்காமல் மே 4ந்தேதி முடிவடையும் நிலையில், பிரெஞ்ச் ஓபன் மே 25ந்தேதி தொடங்குகிறது.